×

கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும் இறந்தார்: தூத்துக்குடி அருகே ஆளில்லாத கிராமமாக மாறிய மீனாட்சிபுரம்

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்து வந்த ஒரே ஒரு முதியவரும் இறந்ததால் ஆள் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராமம். தனி வருவாய் கிராமமாக செயல்பட்டு வந்த மீனாட்சிபுரம் அருகே உள்ள செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு தாய் கிராமமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

அரசு கையேடுகளிலும் இவ்வாறு இருந்து வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் செக்காரக்குடி-2 என மாற்றப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். இந்த கிராமம் விவசாயத்தில் செல்வ செழிப்புடன் இருந்தது. கடந்த 2006ம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகே பொதுப்பணித்துறை சார்பில் குளம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த கிராமத்திற்கு வந்த கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் உடைபட்டதால் கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும் மின் வசதி, சாலை வசதி ஆகியவை இல்லாத காரணத்தாலும் குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது‌. இதைத் தொடர்ந்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு குடும்பமாக காலி செய்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறத் துவங்கினர். மேலும் இந்த கிராமத்தில் பஞ்சாயத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறையில் ஒரு பெண் தீக்குளித்து இறந்தார். இதைத்தொடர்ந்து குளத்தில் விழுந்து இரு பெண்கள் மர்மமான முறையில் இறந்தனர்.

இதன் காரணமாகவும் மீனாட்சிபுரம் பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டு அந்த கிராமத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேறிய நிலையில் கந்தசாமி என்ற முதியவர் மட்டும் தனது மனைவியுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவரது மகன்கள், மகள்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்று விட கந்தசாமியும், அவரது மனைவியும் சொந்த ஊரை விட்டு நகர மாட்டேன் எனக் கூறி விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமியின் மனைவி இறந்து விட தனி ஆளாகி விட்டார்.

அப்போது மகன்கள், எங்களுடன் வந்து விடுங்கள், இந்த கிராமத்தில் நீங்கள் ஒருவர் மட்டும் இருக்க வேண்டாம் என அழைப்பு விடுத்த போதிலும், எனது கடைசி வாழ்நாள் வரை இந்த மண்ணில் தான் இருப்பேன் எனக் கறாராக கூறி விட்டார் கந்தசாமி. தனது கிராமம் என்றாவது ஒரு நாள் பழைய நிலைமைக்கு மாறும் என்ற வைராக்கியத்துடன் மீனாட்சிபுரத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் வயது முதிர்வு காரணமாக கந்தசாமி இறந்து விட மீனாட்சிபுரம் கிராமம் ஆள் இல்லாத கிராமமாக மாறி உள்ளது. மீனாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் வாழ்ந்ததற்கு சாட்சியாக பல்வேறு வீடுகள் பாழடைந்து இடிந்து விட்டன. 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால் மின்சார வாரியம் இதுவரை மின் இணைப்பு ரத்து நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பள்ளி பராமரிப்பின்றி புதர்போல் காட்சியளிக்கிறது.

மேலும் பள்ளியில் உள்ள பலகையில் 2013ம் ஆண்டு பாடம் நடத்தியதாக பலகையில் எழுதப்பட்டுள்ளது. ஆளில்லாத இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து வசதி இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

எனவே ஆளில்லாத மீனாட்சிபுரம் கிராமத்தில் உரிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தால் மீண்டும் குடியேற தயாராக உள்ளதாக அந்த கிராமத்தின் அருகே உள்ள கிராம மக்கள் தெரிவித்தனர். ஆளில்லாத கிராமமாக மாறியுள்ள மீனாட்சிபுரத்திற்கு அரசு மீண்டும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து கிராம மக்களை குடிபெயர செய்ய வேண்டும் என்பதே சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது.

* குடிநீர் தட்டுப்பாடு தான் காரணம்
செக்காரக்குடி ஊராட்சி தலைவரின் கணவர் அய்யம்பெருமாள் கூறுகையில், ‘மீனாட்சிபுரம் கிராமம் அதிக நிலப்பரப்பு கொண்ட மிக முக்கியமான வருவாய் கிராமமாக இயங்கி வந்தது. இங்குள்ள வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனர். ஆடு, மாடுகள் வைத்து விவசாயம் செய்து செல்வசெழிப்பாக வாழ்ந்து வந்த கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் காலி செய்ததற்கான முக்கிய காரணம் குடிநீர் பற்றாக்குறை தான். கருங்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் மீனாட்சிபுரத்துக்கு குடிநீர் வந்து கொண்டிருந்தது.

கடந்த 2006ம் ஆண்டு பொதுப்பணித்துறை புதிய குளம் அமைப்பதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை கையகப்படுத்தி அதில் 160 ஏக்கர் பரப்பளவில் குளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த குளத்துக்கான பணிகள் செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குளத்தின் நடுவே கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பைப் வருவதை கணக்கிடாமல் ஏனோதானோ என்று பணி செய்து கூட்டுக்குடிநீர் பைப் லைன்களை அகற்றி விட்டனர்.

இதனால் இந்த கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்துள்ளனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் படிப்படியாக ஊரை விட்டு வெளியேறி விட்டனர். குடிநீர் தொட்டி, அரசு பள்ளி கட்டிடங்கள், விஏஓ அலுவலகம் உள்ளிட்டவை பழுதடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது’ என்றார்.

* பாழடைந்த கோயில்
மீனாட்சிபுரத்தில் வசித்து வந்த ஒருவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். கோயில் கட்டினாலாவது மீனாட்சிபுரம் கிராமத்தில் இருந்து வெளியே சென்று வசிக்கத் துவங்கிய மக்கள் மீண்டும் வந்து குடியேறுவார்கள் என நினைத்து ரூ.50 லட்சம் செலவில் பெருமாள் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். ஆனால் அந்த கோயிலும் தற்போது மூடி பாழடைந்து கிடக்கிறது. அங்குள்ள ஒரு அம்மன் கோயிலுக்கு மட்டும் வாரத்தில் ஒரு முறை ஒருவர் வந்து குறி சொல்வதாக கூறப்படுகிறது.

The post கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும் இறந்தார்: தூத்துக்குடி அருகே ஆளில்லாத கிராமமாக மாறிய மீனாட்சிபுரம் appeared first on Dinakaran.

Tags : Meenakshipuram ,Thoothukudi ,Karinganallur ,Sekarakudy Panchayat ,Thoothukudi District ,
× RELATED ஆளே இல்லாத கிராமம் இருந்த ஒருவரும் இறந்தார்