×

மோடி தியானத்தால் குமரியில் கெடுபிடி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: பிரதமர் மோடியின் பயணத்தால் குமரியில் சுற்றுலா பயணிகளிடம் கெடுபிடி காட்டும் நிலையில் ஏராளமானோர் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். நேற்று அதிகாலையிலேயே குவிந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடல், நாழிக்கிணறில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்காலமான மே மாதம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்னும் 9 தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பெரும்பாலானவர்கள் தங்கள் விடுமுறை பயணத்தை நிறைவு செய்து வருகின்றனர். வழக்கமாக ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் திருச்செந்தூருக்கும், கன்னியாகுமரிக்கும் செல்வர். இந்நிலையில் கன்னியாகுமரியில் பிரதமர் வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் ஏராளமானோர் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கடலில் கூட்டமாக உற்சாகமாக குளித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் ஓடியாடியும் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் மே மாதத்தின் கடைசி நாளான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.

அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நின்று கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, குரு தட்சிணாமூர்த்தி மற்றும் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை
ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post மோடி தியானத்தால் குமரியில் கெடுபிடி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Murugan Temple ,Ketupidi ,Thiruchendur ,Kumari ,Modi ,Tiruchendur ,Swami ,Murugan ,
× RELATED அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான...