×

கோவில்பட்டியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய குமரி நடன கலைஞர் திடீர் சாவு

திங்கள்சந்தை,ஜூன் 1: இரணியல் அருகே உள்ள பேயன்குழியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (57). அவரது மனைவி அம்பிகா (54). இவர் சுகாதாரத்துறையில் டெங்கு சர்வே அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உண்டு. அவர்களது மூத்த மகன் நிகேஷ் (33). இன்னும் திருமணம் ஆகவில்லை. பிளம்பர் வேலை செய்து வந்தார். இது தவிர அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளுக்கு செல்வதும் உண்டு. இந்தநிலையில் நிகேஷிற்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் இரவு நேரங்களில் அதிகமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 26ம் தேதி நிகேஷ் சக நடன கலைஞர்களுடன் வேனில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் கலை நிகழ்ச்சிக்காக சென்றார். மறுநாள் அதிகாலை நடன நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அதே வேனில் அனைவரும் ஊருக்கு புறப்பட்டு வந்து உள்ளனர். வேன் ஊருக்கு வந்ததும் நிகேஷை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். இதனால் சக நடன கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதே வேனில் அவரை சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிகேஷ் தலையில் அதிக அளவில் ரத்த கட்டு உறைந்து இருப்பதாகவும், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறி இருக்கின்றனர். இது தொடர்பாக சக நடன கலைஞர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நிகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாயார் அம்பிகா இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய குமரி நடன கலைஞர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kovilpatti ,Mohanraj ,Payankuzhi ,Iranial ,Ambika ,
× RELATED குமரி மாவட்டம்; விவேகானந்தர்...