×

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேரும் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.

அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் இதுவரை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் வைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதற்கிடையே பலமுறை சம்மன் அனுப்பியும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தன், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், முரளி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை காட்டி தப்பி வருகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கேசவ விநாயகம் ரூ.4 கோடி வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறி உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம், பாஜ பிரமுகர் முரளி, நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், பாஜ மாநில தொழிற்துறை தலைவர் கோவர்த்தன் ஆகியோர் மே 31ம் தேதி (நேற்று) எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று கடந்த மூன்று தினங்களுக்கு முன் மீண்டும் சம்மன் அனுப்பப்
பட்டது. ரூ.4 கோடி வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் 2 மணி நேரம் நடத்திய விசாரணையில் பணம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வாக்குமூலமாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை பாஜ வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக கொண்டு சென்றது உறுதியாகி உள்ளது. அதற்காக பணத்தை பல இடங்களில் இருந்து வசூல் செய்து மொத்தமாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்றது சிசிடிவி மற்றும் விசாரணைகள் மூலம் உறுதியாகி உள்ளது. இதையடுத்து ரூ.4 கோடி தொடர்பாக பாஜ பிரமுகரும் நெல்லை பாஜ வேட்பாளரான நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதற்கான அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் கடந்த ஒரு மாதமாக தனது விசாரணையின் மூலம் சேகரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், நயினாரின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜராக சம்மன் அனுப்பபட்டிருந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். இதனால் இவ்வழக்கு சில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. சிபிசிஐடி நடத்திய விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை பாஜ வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக
கொண்டு சென்றது உறுதியாகி உள்ளது.

The post ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayanar Nagendran ,Chennai ,Tambaram ,Nellai ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சென்னை...