×

ஆளே இல்லாத கிராமம் இருந்த ஒருவரும் இறந்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். திடீரென குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், மின் வசதி, சாலை வசதி ஆகியவை இல்லாத காரணத்தாலும் ஒவ்வொரு குடும்பமாக காலி செய்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறத் துவங்கினர். இந்த கிராமத்தில் பஞ்சாயத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறையில் ஒரு பெண் தீக்குளித்து இறந்தார். இதைத்தொடர்ந்து குளத்தில் விழுந்து இரு பெண்கள் மர்மமான முறையில் இறந்தனர். இதன் காரணமாகவும் மீனாட்சிபுரம் பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டு அந்த கிராமத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேறிய நிலையில் கந்தசாமி என்ற முதியவர் மட்டும் தனது மனைவியுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவரது மகன்கள், மகள்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்று விட கந்தசாமியும், அவரது மனைவியும் சொந்த ஊரை விட்டு நகர மாட்டேன் எனக் கூறி விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமியின் மனைவி இறந்து விட தனி ஆளாகி விட்டார். தனது கிராமம் என்றாவது ஒரு நாள் பழைய நிலைமைக்கு மாறும் என்ற வைராக்கியத்துடன் மீனாட்சிபுரத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வயது முதிர்வு காரணமாக கந்தசாமி இறந்து விட மீனாட்சிபுரம் கிராமம் ஆள் இல்லாத கிராமமாக மாறி உள்ளது.

The post ஆளே இல்லாத கிராமம் இருந்த ஒருவரும் இறந்தார் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Meenakshipuram ,Sekarakudy Panchayat, Thoothukudi district ,
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...