×

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் 2 வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்த விசைப்படகுகளை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.தமிழக கடலில் மீன்வள பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப். 14ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலம் முடிய இன்றும் 2 வாரங்களே உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை கரைக்கு ஏற்றி பராமரிப்பு செய்து பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் படகுகளை புதுப்பித்தல், என்ஜினில் பழுது நீக்குதல், புதிய மீன்பிடி வலை கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகும் வகையில் மீனவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து தயாராக நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது படகுகளின் உறுதித் தன்மை, பதிவெண் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் படகுகளின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன.

 

The post ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rameshwaram port ,Rameshwaram ,Tamil Nadu Sea ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லத்தடை விதிப்பு..!!