×

மூளையின் முடிச்சுகள்-மூளை நடத்தும் பாடம்!

நன்றி குங்குமம் தோழி

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

சாதாரண மனிதர்களின் மூளைக்கும், மனநோயாளிகளின் மூளைக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்த அளவில் சொல்வதென்றால், சாதாரண மனிதர்கள் தாங்கள் யோசிப்பது சரியா? தவறா என்ற இடத்திற்குள் நிறுத்தி விடுவார்கள். ஆனால் மனநோயாளிகளின் மூளை, தான் யோசிக்கும் அனைத்தையும் எந்த இடத்தில் தொடங்கி, எந்த இடத்தில் முடிப்பது என்பதைத் தெளிவாக வரையறுக்க இயலாது.

உதாரணமாக சாப்பாடு என்பது நம் அனைவருக்குமே இன்றியமையாதது. நமக்குப் பிடித்த சாப்பாட்டை ரசித்து, ருசித்து மெல்ல அசை போட்டே நாம் சாப்பிடுவோம். மனதார திருப்திகரமான உணவைச் சாப்பிடும்போது, நமது தமிழ் சமூகச் சூழலில் அனைவரும் அடிக்கடி கேட்ட பாடல்தான் மனதிற்குள் ஒலிக்கும். “மாயா பஜார்” படத்தில் வருகிற “கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” என்கிற பாடல் வரிகளில் “ஹக..ஹக..ஹக..ஹக..ஹக…”

என்கிற பழம்பெரும் நடிகர் ரங்காராவின் சிரிப்பில் ஆரம்பித்து, அவரின் அகலமான கண்களை உருட்டி.. மிரட்டி.. புன்னகைத்து.. “இந்த கௌரவப் பிரசாதம்… இதுவே எனக்குப் போதும்” என்கிற வரிகளில் உணவு பதார்த்தங்களை அவர் அடுக்கும் விதத்தில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உணர்வால் மெல்லமெல்ல ஆக்கிரமிப்பார். இப்படியாக ஒரு சாப்பாடு என்பது எத்தனை ருசியாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல், போதும் என்கிற எண்ணத்தையே உணவு நமக்கு ஏற்படுத்தும்.

ஆனால் மனநோயில் பாதிப்படைந்தவருக்கு, சாப்பிட வேண்டும் என்கிற “தூண்டுதல்” வார்த்தை, நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். சாப்பிட எது கிடைத்தாலும் தூண்டுதலை நிறுத்த உடனே எடுத்து சாப்பிடுவார்கள். மனநலப் பிரச்னைகளுடன், பசி உணர்வின் தூண்டுதலும் இருந்தால் குப்பையில் இருப்பதையும் எவ்வித அருவெறுப்பு உணர்வின்றி உடனே எடுத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், மனநலம் பாதித்தவர்கள் எந்த நேரத்தில் எதை, எதற்காக செய்யத் தொடங்குவார்கள் என்று கணிக்க முடியாது என்பதே மூளை நமக்கு எச்சரிக்கும் பாடமாகும்.

ஒருசில பிச்சைக்காரர்களும் குப்பை மேடுகளில் இருப்பதை எடுத்துச் சாப்பிடுகிறார்களே என்கிற எண்ணம் இப்போது உங்களுக்குத் தோணலாம். வயிற்றுப் பசியையும், மனநோயால் ஏற்படும் தூண்டுதலையும் இணைத்து என்றுமே பார்க்கக் கூடாது. அவர்கள் வயிற்றுப் பசியின் கொடுமை காரணமாக குப்பையில் கிடைப்பதை எடுத்துச் சாப்பிடுபவர்கள். அதைத்தான் “வறுமையின் நிறம் சிவப்பு” படத்தில், நடிகர் கமலஹாசன் சாக்கடையில் கிடக்கும் ஆப்பிளை எடுத்துச் சாப்பிடுவதாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

வறுமையின் உச்சத்தில் நடக்கின்ற ஒரு செயல் இது. மனநோய்களில் “மனக்கிளர்ச்சி” மற்றும் “மனச்சிதைவு” நோய்களிலும் சில நேரங்களில் அதிகளவு உணவுகளை உட்கொள்வது வழக்கமாக காணப்படும். காரணம், உணர்வுகள் அதிகமாக வெளிப்படும் பொழுது, பசி உணர்வும் அதிகமாகவே தோன்றும். அப்பொழுதும் அதிக அளவு உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதை மனநோய் பாதித்தவர்கள் வழக்கமாய் கொண்டிருப்பார்கள்.

சிலருக்கு மனநல பாதிப்பின் வெளிப்பாடாக மனக்குழப்பம் ஏற்பட்டு, தான் என்ன செய்கின்றோம், எங்கே இருக்கின்றோம் என்பதே தெரியாத நிலைக்கும் சென்று விடுவார்கள். அப்பொழுது அவர்கள் கைக்கு கிடைக்கின்ற பொருட்களை எல்லாம் எடுத்து தன்னோடு வைத்துக் கொள்வார்கள். உண்ணக்கூடாத பொருட்களை எல்லாம் எடுத்து அவர்கள் சாப்பிடுவதை நாம் பார்க்க முடியும்.

சில மனநல பிரச்னைகள் “ஈட்டிங் டிஸாடர்” என்கிற நிலையில் உணவு உட்கொள்ளுதலை சார்ந்து இருக்கும். பசி உணர்வு ஏற்படும் பொழுது நாம் அனைவரும் உணவு அருந்துகின்றோம். ஆனால் மனச்சிதைவு நோய் மற்றும் மனச்சோர்வின் தீவிரத்தில் இருப்பவர்கள் இது போன்று உணவருந்தாமல் பல நாட்கள் இருப்பதை பார்க்க முடியும். காரணம், மனநலம் பாதித்தவர்களின் உணர்வு நிலைகளில் மாற்றம் இருப்பதால் பசியெடுக்கும் உணர்விலும் மாற்றம் ஏற்கின்றது. சிலர் பசி உணர்வினை உணராமலே இருப்பதற்கான வாய்ப்புகளும் இதில் உள்ளது. இதனால்தான் இவர்கள் உணவு உட்கொள்ள வேண்டும் என்கிற தூண்டுதலே இல்லாமலும், உணவினை அருந்தாமலும் பல நாட்கள்வரை இருப்பதைப் பார்க்கலாம்.

உணவு எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும் என்கிற எண்ணத்தின் காரணமாகவும் சிலர் உணவு உட்கொள்ளாமலே இருப்பதும், உணவுகளையும், உணவுப் பொருட்களையும் தொடர்ந்து தவிர்த்து வருவதும்கூட ஒருவிதமான ஈட்டிங் டிஸாடர் பிரச்னைக்குள் வரும். இது பொதுவாக இளம் பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. உடல் எடை அதிகரித்தால் பருமனான தோற்றத்தில் நாம் தெரிவோம் என்கிற காரணமே உணவு உட்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம்.

இது நாளடைவில் மனநலப் பிரச்னையாய் மாறி அவர் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது அதிகளவு உணவு எடுத்துக் கொள்வது அல்லது உணவு எடுத்துக் கொள்ளாமலே இருப்பது, உணவு எடுத்துக் கொண்டபின் வாந்தி எடுப்பது போன்ற செயல்களை இதற்குச் சொல்லலாம்.

ஆனால் மனநோயாளிகளின் செயல்பாடுகளை, நமக்கு ஏற்றாற்போல் கற்பனை செய்ய முடியாது, செய்யவும் கூடாது என்பதே மூளை நமக்கு எடுத்துரைக்கும் பாடம். சரி, சாதாரண மனிதராக மனநோயாளிகளின் செயல்களை ஆய்வு செய்யவில்லை, அதை எப்படித்தான் புரிந்துகொள்வது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்?

The post மூளையின் முடிச்சுகள்-மூளை நடத்தும் பாடம்! appeared first on Dinakaran.

Tags : Gayatri Mahathi ,
× RELATED மனவெளிப் பயணம்