×

புவனாம்மா அஞ்சல் அலுவலகத்திற்கே நான் அம்மா

நன்றி குங்குமம் தோழி

அன்னை தெரசாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘உலகிலேயே மிகக் கொடிய நோய் எது?’ அதற்கு அன்னை சொல்கிறார்… ‘தொழுநோயோ அல்லது காச நோயோ அல்ல… யாராலும் நான் நேசிக்கப்படவில்லையே என்ற ஏக்கம்தான் உலகிலேயே மிகக் கொடிய நோய்’ என்று! உங்களைச் சுற்றி இருப்பவர்களை மதியுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பினை அவர்களிடம் விதையுங்கள். நீங்கள் நேசிக்கத் தொடங்கினால் உலகம் உங்களை நேசிக்கும். ஒரு கை மணி தானியத்தை விதைத்தால் இந்த பூமி இரு கை நிறைய தானியங்களை கொடுக்க தயாராக இருக்கின்றது..!

இப்படியான மனத்துடன் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மதித்து, எதிர்பார்ப்பில்லாத அன்பை அவர்களிடத்தில் விதைத்து, தன்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை பலருக்கும் செய்து கொண்டே வாழ்ந்துகொண்டு இருப்பவர்களில் ஒருவர்தான் புவனாம்மா. மயிலாப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் புவனாம்மாவைச் சுற்றி ஆண்களும் பெண்களுமாக எப்போதும் ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டு, தங்களின் விண்ணப்பங்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறது. முத்து முத்தான தனது அழகிய கையெழுத்தால் அவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டே, அஞ்சலகத்திற்கு வருகிறவர்கள் இடையிடையே கேட்கும் சந்தேகங்களுக்கு, அன்புடனும்… நட்புடனும்… புன்னகை மாறாமல்… மென்மையாகவே பதில் தருகிறார் புவனாம்மா. இடையிடையே கைபேசியில் அழைத்து சந்தேகம் கேட்பவர்களுக்கும் அதே மென்மையான அன்பில் பதில் தருகிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதப் போக்குவரத்தே வெகுவாய் குறைந்துவிட்ட நிலையில், அஞ்சலகத்தின் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள், குழந்தைகள் கல்விக்கான சேமிப்பு, பெண் குழந்தைகளின் திருமணத்திற்கான சேமிப்பு, முதியோர்களின் ஓய்வூதிய சேமிப்பு, தபால் வங்கி, ஏடிஎம் என பல்வேறு நடவடிக்கைகளைத் தன்னகத்தே கொண்டு அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகிறது. தங்களின் வருங்கால வைப்பு நிதியினை ஓய்வு பெற்ற முதியவர்கள் பெரும்பாலும் அஞ்சலகத்தில்தான் சேமிக்கின்றனர்.

பேருந்து நுழையாத கிராமங்களிலும் கண்டிப்பாய் ஒரு அஞ்சலகம் சிறிய தாவாரத்திலாவது இயங்கிக் கொண்டிருக்கும். சைக்கிளில் வந்து மணியார்டர் பணத்தைக் கொடுத்துச் செல்லும் அஞ்சலக ஊழியர்கள் இன்றும் கண்முன் வலம் வருகிறார்கள். என் மகனிடம் இருந்து பணம் வந்துருக்கா? அரசு உதவித் தொகை வந்துருச்சா? என்று வீட்டு வாயிலில் நின்றபடி, தபால்காரர் வருகைக்காக காத்திருக்கும் கல்வி அறிவு கிடைக்கப் பெறாத முதியோர்கள் நமது கிராமங்களில் அதிகம் இருக்கிறார்கள். விரல் ரேகையை விண்ணப்பங்களில் பதித்துவிட்டு, வீட்டில் இருக்கும் இளைய தலைமுறையிடம், தங்களின் ஏடிஎம் அட்டையை கொடுத்து, தன் கணக்கில் பணம் இருக்கா இல்லையா என்பதே தெரியாமல் பரிதவிப்பவர்களும் உண்டு.

இதை பூர்த்தி செய்து கொடுங்கள் என வங்கியிலோ, அஞ்சல் அலுவலகத்திலோ விண்ணப்பத்தை நமது கைகளில் கொடுக்கும்போது, படித்தவர்களுக்கே என்ன செய்ய வேண்டும் எனப் புரியாத அளவுக்கு பக்கம் பக்கமாக விண்ணப்பங்கள் இருக்கும். இந்த நிலையில்தான் அஞ்சலக சேமிப்புகள் குறித்த வழிகாட்டல், சேமிப்புத் திட்டங்களை புரியும்படி வாடிக்கையாளர்களுக்கு விளக்குவது, ஓய்வு கால நிதி பாதுகாப்பு, பணப் பரிமாற்ற நடவடிக்கைகள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுப்பது, தேவையான ஆவணங்களை அறிவுறுத்துவது என ஆல்வேஸ் பிஸியாக இருக்கிறார் புவனாம்மா.

புவனாம்மாவின் உயிர் நாடியும், மூச்சும் 33 ஆண்டுகள் தான் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலகத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது. அவரிடம் பேசியதில்…
“என் பெயர் புவனேஸ்வரி. சுருக்கமாக எல்லோருக்கும் நான் புவனாம்மா. இந்த அஞ்சல் அலுவலகத்திற்கே நான் அம்மா” எனப் புன்னகைத்தவர், ‘‘33 ஆண்டுகளும் க்ளாஸ்-4 ஊழியராக, உடல், உயிர், ஆத்மா என எல்லாத்தையும் இந்த அஞ்சல் துறைக்கே கொடுத்திருக்கிறேன்’’ என்றவாறே மேலே பேச ஆரம்பித்தார்.

‘‘பழைய திட்ட எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நான் 70 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தேன். கூடவே டைப்ரைட்டிங், சார்ட்ஹேண்ட் முடித்து சான்றிதழ்களும் இருந்தது. என் 18 வயதில் அதாவது 1981ல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அஞ்சலகத்தில், இன்று வேலை செய்தால் கூலி என்கிற நிலையில் தினக்கூலி தொழிலாளராய் நுழைந்தேன். ஒரு கட்டத்தில் போஸ்டல் அசிஸ்டென்ட்(PA) பணி உயர்வுக்கான நிரந்தர பணி வாய்ப்புக் கிடைத்தும், “ஒரு பெண் அஞ்சலகத்தில் ஆண்களுக்கு மத்தியில் காசுக்காக வேலை செய்வதா?” என நான் சார்ந்த சமூகக் கட்டமைப்பு தந்த அழுத்தம் காரணமாக கிடைத்த வாய்ப்பினை இழக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. இதை என் துரதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன்’’ எனக் கண் கலங்கிய புவனாம்மா, ‘‘ஒரு பெண்ணுக்கு வேலை மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு எத்தனை பாதுகாப்பானது என்பதைப் புரிந்து கொள்ளும் வயது அப்போது எனக்கில்லை’’ எனப் பெருமூச்சு விடுகிறார்.

‘‘25 ஆண்டுகளையும் அஞ்சல் துறையில் தினக்கூலியாக மட்டுமே நகர்த்தியிருக்கிறேன்’’ என்றவர், ‘‘தினக்கூலியாக நான் வேலை பார்த்த காலகட்டத்தில் ஒரு நாள் ஊதியம் 76 மட்டுமே. காலையில் வந்து யாராவது விடுமுறை என்றால் மட்டுமே அன்றைக்கு வாய்ப்பு. வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம்’’ என்றவர், பிறகு GDS எனப்படும் ஸ்டாம்ப் வெண்டர் பணி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ‘‘இது வெறும் 5 மணிநேர வேலைதான். அதிகாலை 6:30 மணிக்கு அஞ்சலகம் வந்தால் 5 மணி நேரம் மட்டுமே பணி. ஆனால் 5 மணி நேரத்தைத் தாண்டியும் மாலை அஞ்சலகத்தை மூடும் வரை, யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்து கொடுக்கத் தொடங்கினேன்’’ எனத் தான் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளானதை உணராதவராகவே பேசுகிறார் புவனாம்மா.

‘‘குறிப்பிட்ட காலம் GDS வேலை செய்தவர்களை, அடுத்து MTS ஆக பணி நியமனம் செய்வார்கள். இது அலுவலக உதவியாளர் மாதிரியான மல்டி டாஸ்கிங் பணி. என் பணிக் காலத்தை வைத்து, MTS வேலைக்கு நான் தேர்வானது ஓய்வு பெறப் போகும் இறுதி 8 ஆண்டுகள் மட்டுமே. தாராபுரத்தில் MTS பணியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், எனது மகனுக்காக சென்னைக்கு மாற்றல் வாங்கி, மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் இறுதி 6 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நிரந்தர ஊழியராய் நான் பணியாற்றிய காலம் 8 ஆண்டு என்பதால் ஓய்வு ஊதியம் எனக்கு கிடையாது’’ என்ற புவனாம்மாவின் நிறைவேறாத ஆசை, போஸ்ட் மாஸ்டர் ஜென்ட்ரல் அவர்களுக்கு ஒரு மாதமாவது நான் உதவியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதே என்கிறார் விருப்பம் நிறைவேறாமல் போன வருத்தத்தில் கவலை தோய்ந்த முகத்தை காட்டி.

என் உயிர் நாடியே இந்த அஞ்சலகம்தான் என்கிற புவனாம்மா, ‘‘அஞ்சல் அலுவலகப் பணியையும் இந்த சூழலையும் மறக்க முடியாமல், தினமும் காலையில் எப்போதும் போல் அஞ்சலகம் வந்து வாடிக்கையாளர்கள் வரிசையில் அமர ஆரம்பித்து, மீண்டும் தினக்கூலி வேலை வேண்டும் என அலுவலகத்தில் கேட்க ஆரம்பித்தேன். தினக்கூலி வேலைக்குப் பதிலாக அஞ்சலக சேமிப்புக்கான முகவராக உங்களை மாற்றிக் கொண்டால், அஞ்சலக நடவடிக்கைகள் தெரிந்த உங்களின் சேவை வாடிக்கையாளர்களை சரியாகப் போய் சேரும் என உடன் பணியாற்றியவர்கள் அறிவுறுத்தினர்.

10 வாடிக்கையாளர்களுடன் எனது முகவர் பணியை ஆரம்பித்து, இன்று 200 வாடிக்கையாளர்களை எனது கனிவான பேச்சாலும், நான் செய்கிற எதிர்பாராத உதவியாலும் சேகரித்திருக்கிறேன்’’ என புன்னகைக்கிறார். ‘‘நான் அவுட் ஆஃப் டிபார்மென்ட் என்றாலும் காலை 9:30 மணிக்கு அஞ்சலகத்திற்குள் நுழைந்து, அஞ்சலகம் வருகிற அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளைச் செய்து கொடுக்கிறேன். கூடவே அஞ்சலக கோப்புகள் குறித்து அலுவலகத்தில் யார் எந்த சந்தேகத்தைக் கேட்டாலும், கம்ப்யூட்டர் மெமரி மாதிரி எந்த அலமாரியில், எத்தனாவது வரிசையில் எந்தப் பக்கத்தில் அதற்கான கோப்பு உள்ளது என்பது என் விரல் நுனியில்’’ என்றவாறு, தனது பணி அனுபவத்தை நம்பிக்கையோடு அழுத்தமாகவே வெளிப்படுத்துகிறார்.

‘‘தாராபுரத்தையே தாண்டாதவள் நான். சென்னை வந்த பிறகே, எத்தனை விஷயங்களை நான் இழந்திருக்கிறேன் என்று புரிய ஆரம்பித்தது’’ என்றவர், ‘‘எனக்கு நன்றாகப் பாட வரும். மயிலாப்பூர் அஞ்சலகத்திற்கு நேரில் வந்த பாடகி நித்ய மகாதேவனையும், எம்எஸ் அம்மாவின் உதவியாளரையும் சந்தித்ததை என் வாழ்நாளில் மிகப்பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்’’ என நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தவர், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

‘‘நான் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்ததால்தான், சென்னை கடற்கரையையும், சேப்பாக்கம் மைதானத்தையும் ரசிக்க முடிந்தது. அப்படியே சிஎஸ்கே கிரிக்கெட் பிளேயர்களையும் என்னால் நேரில் பார்க்க முடிந்தது’’ எனத் தனது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழுத்தத்தில் தொலைத்த தனது இயல்பான ஆசைகளையும், சுதந்திரத்தையும் மீட்டெடுத்தவராய் குழந்தையாய் குதூகலிக்கிறார் புவனாம்மா. “எல்லாமே அன்புதான். அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்யலாம்” என்றவாறே விடைபெற்றார் புவனாம்மா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post புவனாம்மா அஞ்சல் அலுவலகத்திற்கே நான் அம்மா appeared first on Dinakaran.

Tags : Bhuvanamma Post Office I Am Amma ,Mother Teresa ,Bhuvanamma Post Office I Amma ,
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு