×

நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை வளங்களே ஆரோக்கியத்தின் வழிகாட்டி!

நன்றி குங்குமம் தோழி

‘‘கலை மற்றும் கலை சார்ந்த விஷயங்கள் மேல் எனக்கு தனிப்பட்ட ஆர்வம். அதனால் சொந்த ஊர் சிவகாசி என்றாலும் கோவையில் உள்ள கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். அதன் பிறகு எம்.பி.ஏ, திருமணம் என நாட்கள் சந்தோஷமாக நகர்ந்தது. திருமணத்திற்குப் பிறகும் பேப்பர் க்வில்லிங் கற்றுக் கொண்டு இணையத்தில் விற்பனை செய்தேன்’’ என்று கூறும் சைலஜாவின் ஆரோக்கிய தேடலுக்கு அவரின் அம்மாதான் காரணம் என்கிறார். இவர் ‘யாமி ஹெர்பல்ஸ்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் மக்களின் தேவைக்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.

‘‘பிரச்னை இல்லாத வாழ்க்கை ஏது. என் வாழ்க்கையில் அது ஒரு பேரிடியாக மாறியது. என் அம்மாவிற்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டது. நான்தான் அவர்களை பார்த்துக் கொண்டேன். ஆனால் ஒரு வருடம்தான் அவங்க எங்களுடன் இருந்தாங்க. என்னால் அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களை கட்டி காட்டில்
விட்டது போல் இருந்தது. மனதால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டேன். எனக்கு பிடிச்ச எல்லா விஷயங்களுக்கும் ஃபுல்ஸ்டாப் வைத்தேன். இந்த நிலையில்தான் கர்ப்பமானேன்.

அப்போது பலர் என்னை ஆரோக்கியமான உணவினை சாப்பிட சொன்னார்கள். அப்போதுதான் அம்மாவிற்கு ஆரம்பத்திலேயே நல்ல ஆரோக்கிய உணவினை கொடுத்திருந்தால் அவர்களை இழந்திருக்க மாட்ேடன் என்று தோன்றியது. அதனால் வரும் காலத்தில் நான் மட்டுமில்லை என் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றம் அவசியம் என்று புரிந்தது. இயற்கை முறையில் உணவுகளை தயாரிக்கும் முறையினை தேடினேன். அந்த சமயத்தில் எங்க வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பாட்டி நலங்கு மாவு பத்தி சொன்னாங்க. அவங்ககிட்ட அதை எப்படி தயாரிக்கணும்னு கத்துக்கிட்டேன். குழந்தைகளுக்கான பவுடர்களில் உள்ள ரசாயனம் சரும பாதிப்பை ஏற்படுத்துவது குறித்த செய்தியினை படித்தேன்.

பாட்டி சொன்ன நலங்கு மாவினை தயாரித்தேன். 32 பொருட்களை சேர்த்து ஏழு கிலோ மாவினை ரெடி செய்தேன். அதை புகைப்படம் எடுத்து என் முகநூலில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து முதலில் ஐந்து பேர் ஆர்டர் செய்தாங்க. அந்த ஐந்து இப்போது 50 ஆயிரமா மாறி இருக்கு. நலங்கு மாவில் ஆரம்பித்த என்னுடைய பயணம் தற்போது கஞ்சி மாவு, ஜவ்வாது வாசனை திரவியம், இயற்கை சோப், சருமத்திற்கான சீரம் என 40க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறோம்’’ என்றவர் ஆர்டர் அதிகரிக்க அதற்கான தயாரிக்கும் முறையை மாற்றியுள்ளார். ‘‘தரமான ஆரோக்கியமான பொருட்களை கொடுக்கும் போது கண்டிப்பாக நாளடைவில் அதற்கான தயாரிப்பும் அதிகமாகும்.

ஆரம்பத்தில் சிறிய அளவு என்பதால் வீட்டிலேயே உற்பத்தி செய்தேன். பொருட்கள் மற்றும் அளவும் அதிகமானதால், பெண்களை நியமித்து அவர்கள் மூலமாக தயாரிக்கிறேன். இதன் மூலம் அவர்களுக்கும் வருமானம் ஏற்படுத்திக் கொடுக்க முடிகிறது. நான் இந்த தொழிலை ஆரம்பித்த போது இதற்கான மூலப்பொருட்களை மொத்த விற்பனையில் வாங்கினேன். அதன் பிறகு நானே விளைவிக்க திட்டமிட்டேன்.

பயனற்று இருக்கும் இயற்கை விளை நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளிடம் பேசி அவர்களின் நிலத்தில் எனக்கு தேவையான செம்பருத்தி, ஆவாரம்பூ, ஆலோவேரா போன்றவற்றை இயற்ைக முறையில் பயிரிட்டு தரும்படி கேட்டுக் கொண்டேன். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைப்பதால் அவர்களும் எனக்காக பயிர் செய்தார்கள். அதன் பிறகு சொந்தமாக ஆர்கானிக் தோட்டத்தினை வாங்கினேன். அதில் ஏற்கனவே கொய்யா, தென்னை, மாங்காய் பயிர் செய்யப்பட்டு இருந்தது. அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.

எங்க ஊரில் கொய்யா விளைச்சல் அதிகம். ஆனால் தரகர்கள் அதனை குறைந்த விலைக்கு தான் விவசாயிடம் இருந்து வாங்கி அவர்கள் லாபத்தில் விற்பார்கள். இதனால் நிறைய பழங்கள் வீணானது. அதை மதிப்புகூட்டும் பொருளாக மாற்ற திட்டமிட்டேன். அவர்களிடம் கொய்யாவை வாங்கி காய வைத்து, பேஸ்பேக் மற்றும் அதன் இலையில் டீ தயாரித்தேன். அதன் பிறகு நெல்லிக்காயில் ஆம்லா மின்ட் போல தயாரித்தேன். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், பலர் விரும்பினாங்க. இப்படித்தான் இந்த மண்ணுக்கு ஏற்ப விளையும் பயிர்களை விளைவித்து அதில் இருந்து பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தேன்’’ என்றவரின் நோக்கம் பழைய பொருட்களுக்கு புதிய வடிவம் கொடுக்க வேண்டும் என்பதாம்.

‘‘நம் முன்னோர்கள் பின்பற்றியதை நாம் மறந்துவிட்டோம். அதை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய நினைத்தேன். குழந்தைகளுக்கான மையினை தேங்காய் சிரட்டை, வேப்பமர பால் அல்லது ஜவ்வரிசி கொண்டு தயாரிச்சேன். வசம்பினை நூலில் கோர்த்து குழந்தைகளுக்கான பிரேஸ்லெட் தயாரித்தேன். இது செரிமானத்திற்கு நல்லது. நெய்யில் கண்மை. இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இத மட்டுமில்லாமல் சருமத்திற்கு கொய்யா சீரம், தேங்காய் மற்றும் ரோஜா இதழ்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடர், நாட்டு துளசியில் டீ, நெல்லிக்காய், செம்பருத்தி, முருங்கை இலை டீ, ஹெர்பல் ஹேர் டை பவுடர், தும்பை பூ, பாதாமில் இருந்து ரூட் டச்சப் டை’’ என்றவர் இவை அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே மக்களின் பயன்பாட்டிற்காக கொடுக்கிறார்.

‘‘முதலில் நலங்கு மாவுதான் தயாரித்தோம். அதன் பிறகு மக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தோம். பொருளின் தன்மையை தெரிந்து கொண்டு தயாரித்தேன். மேலும் ஊரில் அந்தக்காலத்தில் வீட்டு மருத்துவம் தான். அந்தக் காலத்து பாட்டிகளிடம் இருந்து எந்த இலையில் என்ன சத்து, எதனுடன் எதை சேர்க்கணும் என தெரிந்து கொண்டேன். கொய்யா இலை டீயில் கொய்யா இலை மட்டுமில்லாமல் கெடாரங்கா இலை, மா இலை. அதிமதுரம், சீரகம் எல்லாம் சேர்க்கிறோம்.

அடுத்து கருப்பு கவுனி கஞ்சியும் மிக்ஸ் செய்திருக்கிறோம். சிறுதானியங்கள் என்றால் அதனை அதிக நேரம் சமைக்கணும். அதனால் நாங்க அதை மிக்சாக கொடுத்தால் சாப்பிடுவதற்கு எளிது. கருப்பு கவுனியை நன்றாக காயவைத்து அதிலேயே சீரகம், மிளகு எல்லாம் சேர்த்து பொடித்து தருகிறோம். அதை சுடு தண்ணீரில் காய்ச்சி குடித்தால் போதும். வயிறும் நிரம்பும், உடலுக்கும் நல்லது. எடை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ். இதைத் தொடர்ந்து காய்கறிகள் சேர்த்து சூப் வகைகள் என இன்ஸ்டன்ட் உணவுகளை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. எங்களின் அனைத்துப் பொருட்களையும் ஆன்லைன் மூலமாகத்தான் விற்பனை செய்கிறோம்’’ என்றவர் இதற்காக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்.

‘‘என்னைப் பொறுத்தவரை நாம் வெளிநாட்டு உணவுப் பொருட்களை தேடுவதற்கு பதில் நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களைக் கொண்டே பலவிதமான பொருட்களை தயாரிக்க முடியும். அதை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதில் தான் சில நுணுக்கங்கள் அடங்கியுள்ளது. உதாரணத்திற்கு, வீட்டில் பாத்திரம் தேய்க்க சோப் அல்லது லிக்விட்களை பயன்படுத்துகிறோம். அவை நம்முடைய சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதற்கு பதில் எலுமிச்சை தோலை என்சைமாக மாற்றி அதில் எலுமிச்சை வேகவைத்த எக்ஸ்ட்ராக்ட், பூந்திக்கொட்டை, பாதாம் பிசின் சேர்த்து பாத்திரம் தேக்கும் லிக்விட் தயாரித்து இருக்கிறோம். அதே போல் நொச்சி இலை, வேப்ப இலை, பூண்டு தோல் கொண்டு கொசு மருந்து தயாரிக்கிறோம். இவை எல்லாம் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாது. அன்னாசிப் பழம் கொண்டு தரை சுத்தம் செய்யும் கிளீனரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கான தனிப்பட்ட யூனிட்டினை எங்க ேதாட்டத்தில் அமைத்திருக்கிறோம்.

என்னுடைய இந்தப் பயணத்திற்கு முழு சப்போர்ட்டாக இருப்பது அப்பாதான். அவர்தான் என் மென்டார்னு சொல்லணும். அதே போல் நான் தயாரிக்கும் புதுப்புது பொருட்களுக்கு பக்கபலமாக இருப்பது என் கணவர். நான் தொழிலை ஆரம்பித்த போது, எங்களிடம் சங்கரபாண்டியன் என்ற வாலிபன் வேலைக்கு சேர்ந்தான். அவனுடைய உழைப்பும் எங்களின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். ஆரம்பத்தில் நான் மட்டுமே செய்து வந்தேன். இப்போது ஆட்களை நியமித்து இருக்கிறேன். இல்லத்தரசிகளும் எங்களின் பொருட்களை வாங்கி அவர்களின் லேபிளில் விற்பனை செய்றாங்க. மேலும் பல பொருட்களை அறிமுகம் செய்து, பெரிய அளவில் கொண்டு போகணும் அதுதான் என்னுடைய விருப்பம்’’ என்றார் சைலஜா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை வளங்களே ஆரோக்கியத்தின் வழிகாட்டி! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sivakasi ,
× RELATED போதையில் லாரி ஓட்டிய டிரைவர் அதிரடி கைது