×

அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு; மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் ஆய்வு


அரக்கோணம்: அரக்கோணம் அருகே வனப்பகுதியொட்டி உள்ள கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அப்பகுதியில், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலையிலும், அரக்கோணம்- திருத்தணி ரயில் மார்க்கத்திலும் வனப்பகுதி உள்ளது. இங்கு புள்ளி மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட சில வன விலஙகுகள் உள்ளன. இரைத்தேடி மான்கள் வனப் பகுதியில் இருந்து வெளியே வரும்போது ரயில் மற்றும் வாகனங்களில் சிக்கி பலியாகி வருகின்றன. வனப்பகுதியொட்டி உள்ள கைனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதோடு, சிறுத்தையின் கால் தடங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால், அங்கிருந்தது சிறுத்தையின் கால்தடம் அல்ல, காட்டு பன்றியின் கால்தடம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு சின்ன கைனூர் பகுதியில் உள்ள புதரில் சிறுத்தை பதுங்கியிருந்ததை சிலர் பார்த்ததாக தகவல் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டிக் கொண்டு அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். மேலும், பலர் பீதியில் தங்களது வீடுகளிலேயே விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தனர். இதுதொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை, வருவாய் துறை மற்றும் டவுன் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ராணிப்பேட்டை மாவட்ட வனச்சரக அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் வனவர் துரைமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் முரளிதரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சின்ன கைனூர் சம்பவ பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிகிறது. மேலும், இந்த வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் எதுவும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு; மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dawn ,Arakkonam ,Leopard movement ,Ranipet district ,Arakkonam-Solingar highway ,Arakkonam-Thirthani ,Leopard ,Dinakaran ,
× RELATED விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை...