×

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்: பள்ளி திறக்கும் முதல்நாளே வழங்க ஏற்பாடு


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.26 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக இலவச பாடநூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் துவங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் நாளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச பாடநூல்களை விநியோகம் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் பாடநூல்கள் கடந்த 15 நாட்களாக அனுப்பப்பட்டு வருகின்றன. மாவட்டங்களுக்கு வரும் பாடநூல்கள் உடனடியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களிலும் 987 அரசு, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகள், 214 நடுநிலைப்பள்ளிகள், 412 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 1,613 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1ம் வகுப்பில் 13,386, 2ம் வகுப்பில் 14,682, 3ம் வகுப்பில் 15,841, 4ம் வகுப்பில் 16,255, 5ம் வகுப்பில் 17,589, 6ம் வகுப்பில் 21,297, 7ம் வகுப்பில் 22,470, 8ம் வகுப்பில் 22,593, 9ம் வகுப்பில் 23,039, 10ம் வகுப்பில் 21,231, பிளஸ் 1ல் 19,350, பிளஸ் 2ல் 18,434 என மொத்தம் 2,26,157 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கான பாடநூல்கள் விருதுநகர் கல்வி மாவட்டத்திற்கு விருதுநகர் சுப்பையாநாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி கல்வி மாவட்டத்திற்கு திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் இரு கல்வி மாவட்டங்களில் உள்ள 1,613 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,26,157 மாணவியருக்கு பள்ளி திறக்க உள்ள ஜூன் 6 அன்றே பாடநூல்கள் வழங்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் பாடநூல்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர்.

The post அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்: பள்ளி திறக்கும் முதல்நாளே வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...