பழநி: பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த மலைக்கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை உள்ளது. ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் கிரிவல பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, பக்தர்கள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிரிவலப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கிரிவலப் பாதையின் வெளிப்புறத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கோயில் நிர்வாகம் சார்பில் துவக்கப்பட்டுள்ளது. இடும்பன்கோயில் ரோடு அருகே கிரிவலப் பாதையில் உள்ள கடைகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டு அஸ்திவார பணி நடந்து வருகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சுற்றுச்சுவர் கட்டுவதால் வணிகம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோயில் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர் கட்டுவது சரியானது அல்ல. ஏனெனில் கிரிவல பாதையில் ஏராளமான மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிரிவலப் பாதை வழியாகத்தான் விவசாயிகள் சென்று வந்தனர். ஆனால், தற்போது கிரிவலப் பாதையில் சுவர் அமைத்தால் வியாபாரம் பாதிக்கும். எனவே சுற்றுச்சுவர் கட்டுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றனர்.
The post பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்: மறுபரிசீலனை செய்ய வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.