×

36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு..!!

சென்னை: 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை, திருவான்மியூர், மயூரபுரம், அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் சர்வே எண்.172/2- ல் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள திருக்கோயிலும் நிர்வகிக்க ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல்சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் காரியதரிசி TT.குப்புசாமி செட்டியார் என்பவரால் 09.09.1984 அன்று தாமாக முன் வந்து இந்து சமய அறநிலையத்துறை வசம் திருக்கோயில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

1985 ஆம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத்தாரால் (மூன்று மண்டலத்தார்கள்) இது திருக்கோயில் அல்ல சமாதி என விளம்புகை செய்திட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வானது வழக்கு எண் WA. 2191/2018, WA. 2316/2018, WA 2390/2018 வழக்குகளின் இறுதி தீர்ப்பை 27.03.2024 அன்று வழங்கியது. இத்தீர்ப்பில் அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத்தில் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ராஜா, அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவுடன் தொடர்ந்து சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது சட்ட விரோதமான செயலாகும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

எனவே, மேற்குறிப்பிட்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் திருக்கோயில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக திருக்கோயில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து பொது மக்கள் சுமார் 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக எதிர்வரும் 12.07.2024 அன்று நடத்தப்படவுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Srimad Bambhan Kumarkurdasar Temple ,Chennai ,Hindu Religious Foundation Department ,Srimat Bomban Kumarkurdasar Temple ,Thiruvanmiur ,Mayurapuram ,Arulmigu ,Srimad Bambhan Kumarkurudasar ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...