×

திடீர் அனுமதியும்.. படகு சேவை நிறுத்தமும்.. விவேகானந்தர் மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகள் குழப்பம்

குமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். அதன்பிறகு தியான மண்டபத்திற்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இன்று இரண்டாவது நாள் தியானத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார் . பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை போலீசார் பதிவு செய்து பலத்த சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் தற்போது திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 11.40 மணிக்கு மேல் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளது.

காலையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திடீரென சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி விதிக்கப்பட்டுள்ள தடைகளால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றிப்பார்க்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

The post திடீர் அனுமதியும்.. படகு சேவை நிறுத்தமும்.. விவேகானந்தர் மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகள் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Vivekananda Hall ,Kumari ,Kanyakumari ,Lok Sabha elections ,Modi ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர்கள் வெளியேற்றம்