×

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தூர்வாரியும் பயனில்லை; ேகாட்டை அகழியை ஆக்கிரமித்து அழகை சீர்குலைக்கும் ஆகாய தாமரை செடிகள்: வேருடன் அப்புறப்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்


வேலூர்: கோட்டையில் உள்ள அகழியில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து கோட்டையின் அழகை சீர்குலைத்து வருகிறது. எனவே அவற்றை வேருடன் அப்புறப்படுத்த தொல்லியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான உள்ளூர், வெளிநாடு, வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் கோட்டை வளாகம் மற்றும் அகழியை பார்வையிட்டு செல்கின்றனர். கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பில் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அகழி தூர்வாருதல், கோட்டைக்குள் சாலைப்பணிகள், விளக்குத்தூண்கள் என ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது. இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் அகழியுடன் கோட்டை மிளிர்கிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கோட்டை அகழியில் பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அகழி தண்ணீர் கழிவுநீராக மாறியது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசிகிறது. மேலும் வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் உள்ள தண்ணீரில், தெற்கு பகுதியில் பெரியார் பூங்கா அருகில் உள்ள அகழி நீரில் ஆகாய தாமரை செடிகள் பெருகி வளர்ந்து அகழியை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது.

இதனால் அகழியின் அழகே சீர்குலைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கோடிக்கணக்கில் செலவு செய்து அகழி தூர்வாரப்பட்டது. இருப்பினும் முறையாக தூர்வாரியும் எந்த பயனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: கோட்டை நுழைவு வாயிலின் தெற்கு மைதானத்தின் ஒரு பகுதி புல்வெளி பூங்காவாக தொடர்ந்து பராமரிப்பில் இருந்து வருகிறது. வடக்கில் அமைந்துள்ள பூங்கா அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோட்டைக்குள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான அம்சங்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர். ஆனால் எந்த பணியும் முழுமையாக முடிக்கவில்லை.

கோட்டையை இரவிலும் காணும் வகையில் அகழியை ஒட்டிய கரைப்பகுதியில் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் கோட்டையை சுற்றி அகழியை ஒட்டியுள்ள காலிஇடங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. இங்கு செடிகொடிகளும், புதர்களும் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக அகழியை ஒட்டியுள்ள கரைப்பகுதி முழுவதுமே குப்பைகளாலும், மண்டிய புதர்களாலும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. ஏற்கனவே கோட்டையை சுற்றியுள்ள காலியிடங்களும் பூங்காவாக மாற்றப்பட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு தூர்வாரப்பட்ட அகழியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை வேருடன் அகற்றி அகழியின் அழகை மீட்டெடுக்க தொல்லியல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அகழியில் இயக்கப்பட்டதுபோல் மீண்டும் படகு சவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

படகு சவாரி கனவு தானா?
வேலூர் கோட்டையில் நடந்த நிகழ்வுகளை வரலாற்று சுவடுகளாக 3டி வடிவில் கண்டு களிக்கும் வகையில் புதிய அறை மற்றும் அரங்கு அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ேகாட்டைக்குள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிற்றுண்டி அரங்கம் அமைத்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர், கழிவறை வசதிகளும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. கோட்டைக்குள் அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகளும் மாயமாகி விட்டது.பல கோடி பணம் செலவழித்து தூர்வாரியதும் அகழியை சுற்றி படகு சவாரி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று சுற்றுலா பயணிகள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக யாரும் எந்த முயற்சியும் எடுத்ததாகவும் தெரியவில்லை. இதனால் படகு சவாரி கனவு தானா என சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தூர்வாரியும் பயனில்லை; ேகாட்டை அகழியை ஆக்கிரமித்து அழகை சீர்குலைக்கும் ஆகாய தாமரை செடிகள்: வேருடன் அப்புறப்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Castle ,Ekatta trench ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!