தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை, தாவரகரை வனப்பகுதியில் இருந்து மூன்று யானைகளை, ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது பாலதோட்டனப்பள்ளி அருகே உள்ள தனியாரின் கிரீன் அவுஸ் அருகே யானைகள் சென்றபோது தாழ்வாக செல்லும் மின்கம்பியில் ஒரு ஆண் யானை சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மற்ற இரண்டு யானைகளை நேற்று காலை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்கு விரட்டினர். தகவல் அறிந்த ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயினி வந்து விசாரணை மேற்கொண்டார். இறந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும், 8 அடிக்கும் கீழ் மின்கம்பி தொங்கியபடி சென்றதால் அதில் யானை உரசி, மின்சாரம் தாக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் யானையை அங்கேயே குழிதோண்டி புதைத்தனர்.
The post தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.