×

சூட்டைக் கிளப்புது கோடை வெயில் மீண்டும் சூடு பிடிக்குது நுங்கு விற்பனை: சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: தொடர் கோடை மழையால் நுங்கு விற்பனை பின்னடவை சந்தித்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் விற்பனை களைகட்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே கத்திரி வெயிலும் தொடங்கியது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், மோர், கரும்புச்சாறு, கூழ் மற்றும் குளிர்பானங்களை பருகி வந்தனர். குறிப்பாக நுங்கு விற்பனை களைகட்டியது. தொலைதூர பகுதிகளில் பனைமரங்களில் இருந்து தொழிலாளர்கள் நுங்குகளை வெட்டி மூட்டைகளில் கொண்டு வந்தனர். அவற்றை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்தனர்.

இதனிடையே, கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நீடித்த மழையால் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் இளநீர், நுங்கு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்தது. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்துவிட்டது. கத்திரி வெயிலும் முடிந்துவிட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, நுங்கு, இளநீர் ஊள்ளிட்ட பொருட்களின் விற்பனை மீண்டும் களைகட்டியுள்ளது. நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நுங்கு விற்கப்படுகிறது. செம்பட்டியில் நுங்கு விற்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது: கோடை மழை தொடர்ந்து பெய்ததால் நுங்கு விற்பனை குறைந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் விற்பனை களைகட்டியுள்ளது. பத்து ரூபாய்க்கு 3 நுங்குகளை தருகிறோம் என்றார்.

The post சூட்டைக் கிளப்புது கோடை வெயில் மீண்டும் சூடு பிடிக்குது நுங்கு விற்பனை: சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Nungu ,Dindigul district ,Kathri ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டையில் ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்