×

விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம்

சென்னை: பக்தி போதை அரசியலில் எடுபடாது, இது உறுதி! என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஏழு கட்டங்களாக்கி பொதுத் தேர்தலை, தமது பிரச்சார வசதிக்கேற்ப அமைத்துக்கொண்டும்கூட, பா.ஜ.க.வின் ஒரே ஒரு ‘பிரச்சார பீரங்கியான’ பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் எதிர்பார்த்த பலனைத் தரும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தளர்ந்து விட்டது!அதோடு மட்டுமா?

* பி.ஜே.பி.யின் புளுகுமூட்டையை குத்திக் கிழித்த இந்தியா கூட்டணி என்னும் குத்தூசி!

இந்தியா கூட்டணியின் பிரச்சாரப் பெருமழை நாடெங்கும் பரவலாகப் பெய்து, மோடியின் புளுகுமூட்டையை பிரச்சாரக் குத்தூசியால் கிழித்து மக்கள்முன் அவிழ்த்துக் கொட்டி, உண்மையை ஒரு குண்டுமணி அளவுக்குக்கூட அவரது பிரச்சாரத்தில் கண்டறிய முடியாது என்பதை நாளும் எதிர்க்கட்சித் தலைவர்களது பேச்சுகள் சூறாவளியாகி சுழன்றடித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், வியாபாரிகள், நடுநிலையாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் விழித்தெழச் செய்ய வாய்ப்பானது.இதனால் தோல்வி பயம் உச்சக்கட்டத்தில் பா.ஜ.க.வுக்கும், அதன் பிரதான பிரச்சாரகரான பிரதமர் மோடிக்கும் ஏற்பட்டுவிட்டதால், ‘‘புதுப்புது வித்தைகளை’’ நாளும் நிகழ்த்திக் காட்டுவதில் நிபுணராகவே பிரதமர் மோடி வலம் வருகிறார்! அவருக்கு உகந்தவர்களை, அவசர அவசரமாக முக்கிய பெரும் பதவிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெறும் பல முக்கிய பதவிகளில் உள்ளவர்களைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பதவி நீட்டிப்புச் செய்து, ஜனநாயக மரபுகளை – மாண்புகளை சிதைத்து, சின்னாபின்னப்படுத்தும் ‘சின்னத்தனத்தில்’ ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி! பிரபல சட்ட வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டவும் செய்கின்றனர்! அதுவே மீண்டும் வரும் நம்பிக்கை அவருக்குக் குறைந்துவிட்டதற்குரிய சான்றாகும்!கடைசி கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு (30.5.2024) முடிவடைகிறது- அவரது வாரணாசி தொகுதி உள்பட.

* பிரதமர் மோடி ‘தியானம்’மூலம் பிரச்சாரம் செய்வதும் குற்றமே!

இன்று (30.5.2024) கன்னியாகுமரிக்கு வந்து விவேகானந்தர் பாறையில் உள்ள நினைவு மண்டபத்தில் ‘மூன்று நாள் தியானம்’ என்று ஓர் அறிவிப்பு தந்து, ஒரு புது வித்தைமூலம், ஒன்றாம் தேதி நடக்கின்ற ஏழாம் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சரிவினைத் தடுத்து, அனுதாபத்தோடு, பக்தி உணர்வுள்ள ஒரு சிலர் இதனால் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வாய்ப்பு ஏற்படாதா? என்றுதான் அவர் கணித்திருக்கக் கூடும்.அல்லது அத்திட்டத்திற்குப் பின் ஏதோ ஒரு சூட்சமம்புதைந்திருக்கிறது!மேற்கு வங்கத்தில் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற விருக்கும் தேர்தலில் ‘விவேகானந்தர்முன் தியானம்’ என்ற வித்தை வாக்குகளைப் பெற வழி ஏற்படுத்தும் என்ற நப்பாசையும்கூட காரணமாக இருக்கலாம்.வாக்குப் பெட்டி எதிர்பார்த்த அளவுக்கு நிரம்பாதது மட்டுமல்ல- பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க, வாக்கா ளர்களை மல்லுகட்டி அழைத்து வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் – அவர்கள் ஒத்துழைப்பு மோடியின் பா.ஜ.க.வுக்கு ‘தேய்பிறை’ ஆகிவிட்டது! ஆர்.எஸ்.எஸ். தனித்தே நிற்கும் நிலை பகிரங்கப்பட்டுள்ளது!அந்த மனக்குடைச்சல் அவருக்கு ஒருபுறம்; மறுபுறம் தோல்வி அச்சம் உலுக்குவதால், இப்படி ஒரு ‘தியான வித்தை’மூலம் நாடு தழுவிய ஏழாம் கட்ட வாக்காளர்களிடையே மறைமுகமாக வாக்குச் சேகரிக்க வழி கண்டுபிடிப்புதான் இது!

* தேர்தல் சட்டப்படி சைகைகள்மூலம் பிரச்சாரம் செய்வதும் குற்றமே!

தேர்தல் சட்டப்படி, சைகைகள் (Visual representation) மூலம் செய்யும் பிரச்சாரத்தை காலக்கெடுவுக்குப் பின்னர் செய்வது சட்ட விரோதம் ஆகும்! இதைத் தேர்தல் ஆணையம் ஏன் வேடிக்கை பார்த்து, இந்த வித்தைக்குத் துணை போகிறது என்பது புரியவில்லை!கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு – ‘‘பந்தியில் பரிமாறுகிறவர் நம்மாளாய் இருந்தால், எந்தப் பந்தியில் உட்கார்ந்தாலும் (அது கடைசி பந்தியாக இருந்தாலும்கூட) என்ன? பரிமாறுகிறவர், நம்மைப் பார்த்துக் கொள்வார் அல்லவா!’’ அதுதான் இப்போது (தேர்தல் ஆணையம்) நமக்கு நினைவுக்கு வருகிறது!

* ‘‘கடவுள் அவதாரங்கள் தியானம் செய்ததா – ஆடிப் பாடியதா?’’

மற்றொரு கேள்வியும் நியாயமாகக் கேட்கப்பட வேண்டும். ‘கடவுள் அவதாரங்கள்’ எப்போதாவது ‘தியானம்’ செய்து, தியானத்தின் முன்போ, பின்போ சங்கீதத்திற்கு தாளம் போடுவதுபோல், பக்தி வேஷமும் போட்டு ஆடியதாக, தலையாட்டியதாக எந்தப் புராணத்திலும் இதுவரை காணவில்லையே!
இதுவரை மக்களை படாதபாடு படுத்திய பிரதமர் மோடி, தனது வித்தைகளால், கடவுள்களையும் (அப்படி யாரேனும் இருந்தால்) படாதபாடு படுத்தவும் முனைந்துவிட்டார்!

* பக்திப் போதை – அரசியல் ஆதாயத்திற்கா?

பக்திப் போதை எந்த அளவுக்கு அரசியலில் ஆயுதமாக்கப்படுகிறது பார்த்தீர்களா? வெட்கம்! மகாவெட்கம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,president ,Dravidar Association ,Ki. Veeramani ,Pa. J. K. Win ,Vivekananda ,
× RELATED தோல்வியில் அண்ணாமலை பித்துப்பிடித்து பேசி வருகிறார்: எஸ்டிபிஐ கண்டனம்