×

கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வர உள்ளார். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்ட நிகழ்ச்சியாக பிரதமர் வரும் காரணத்தால் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என கட்சி மேலிடத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதன் காரணமாக எந்த இடத்திலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்போ, விளம்பர பதாகைகளோ வைக்கப்படவில்லை. இந்த நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான உள்ள பொன். ராதாகிருஷ்ணன் பிரதமர் வந்து இறங்க கூடிய அரசு சுற்றுலா மாளிகை வாசலில் உள்ளே செல்ல வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். உயரதிகாரிகள் அனுமதிக்கும் பட்சத்தில் தான் தாங்கள் அனுமதிக்கமுடியும் என தெரிவித்ததை தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் காத்திருந்தார். இருப்பினும் அவருக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் தற்போது அப்பகுதியிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றார்.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும், செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிடுவதற்கு வந்தேன் என பதிலளித்துவிட்டு சென்றார். பின்னர், காவல்துறை தரப்பில் கூறுகையில் உயர் அதிகாரிகள் எங்களுக்கு எந்த வித அனுமதியும் கொடுக்கப்படவில்லை, அரசியல் சார்ந்த யாரும் உள்ளே செல்ல அனுமதி கொடுக்காத காரணத்தால் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை உள்ளே அனுமதிக்கபடவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு சுற்றுலா மாளிகை, சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

The post கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Former Union Minister ,Kanyakumari ,Radhakrishnan ,Pong ,Narendra Modi ,Former Union ,minister ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம்...