×

கர்ப்ப காலத்தில் முடியை உண்ணும் பழக்கம்; உ.பி.யில் பெண்ணின் வயிற்றில் 2.5 கிலோ தலைமுடி; ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 25 வயதுடைய பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதி அடைந்துள்ளதார். இதனால் அவரால் உணவு சாப்பிட முடியவில்லை. வாந்தி எடுத்தார். உடனே பெண்ணின் குடும்பத்தினர், அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து விட்டு மருந்து வழங்கினார். இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், சித்ரகூடில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போதுதான் வயிற்றில் முடி இருப்பது தெரிந்தது.

அதாவது இந்த பெண், தனது பிரசவ காலத்தில் தலை முடியை உண்ணும் விநோத பழக்கத்திற்கு ஆளாகி இருந்ததும், தனது தலைமுடி மட்டுமல்லாது, மற்றவர்களின் உதிர்ந்த தலை முடியையும் அதிகமாக உண்பார் என்பதும் தெரியவந்துள்ளது. குழந்தை பிறப்பிற்கு பிறகு அந்த பழக்கத்தை நிறுத்திய பிறகு வயிற்று வலியால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதுமட்டுமல்லாது, இவர் பிரசவ காலத்தில் உண்ட இத்தலைமுடி அவரின் வயிறு முழுவதும் நிரம்பி கட்டியாக மாறி இருந்ததையும் டாக்டர்கள் அறிந்து கொண்டனர்.

இந்நிலையில், பெண்னை சோதித்த டாக்டர் நிர்மலா கூறுகையில், ‘இவர் தலைமுடி உண்ணும் ட்ரைக்கோபேஜிய என்ற அரியவகை மருத்துவ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தலை முடியை சாப்பிடுவது, உறிஞ்சுவது அல்லது மென்று சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது ஊட்டச்சத்து குறைபாடு, செரிமான அமைப்பில் அடைப்புகள் மற்றும் மரணம் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்’ என்றார். இந்நிலையில், இவருக்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த 2.5 கிலோ எடையுள்ள முடி கொத்து அகற்றப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கர்ப்ப காலத்தில் முடியை உண்ணும் பழக்கம்; உ.பி.யில் பெண்ணின் வயிற்றில் 2.5 கிலோ தலைமுடி; ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...