×

வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்புகிறார்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் நாளை கைதாகிறார்

பெங்களூரு: கர்நாடகாவில் பாலியல் புகார் விவகாரத்தில் நாளை பெங்களூரு திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா கைதாகிறார். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி மதசார்பற்ற ஜனதா தள எம்.பியாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜவுடன், மஜத கூட்டணி அமைத்துள்ளதால், இந்த விவகாரம் அந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. அங்கு பல இடங்களில் மகளிர் காங்கிரசார், பிரஜ்வாலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த பாலியல் விவகாரம் கர்நாடக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பாஜவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிரஜ்வல், மஜத கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இந்தியாவுக்கு திரும்பவில்லை. வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டை பிரஜ்வல் மறுத்திருக்கிறார். தேர்தல் முடியும் வரை என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், எனது பயணம் திட்டமிடப்பட்டதுதான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்காக பிரஜ்வல் நாளை ஆஜராக இருக்கிறார். இதற்காக அவர் பெங்களூர் வர இருப்பதாக வெளிநாட்டின் செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். நிலவரம் இப்படி இருக்கையில் பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானன பட் விசாரணைக்கு எடுத்துள்ளார். அதே நேரம், வழக்கை விசாரித்து வரும் எஸ்ஐடி, தனது ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை வழங்குவதாகவும் கூறி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறார். எஸ்ஐடியின் வாதங்கள் மற்றும் பிரஜ்வல் வழக்கறிஞரின் வாதங்களுக்கு பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்குவார். இருப்பினும், இந்த வழக்கு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளதால், பிரஜ்வல் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

The post வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்புகிறார்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் நாளை கைதாகிறார் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Prajwal ,Prajwal Revanna ,Bengaluru ,Karnataka ,Karnataka State ,Hassan Lok Sabha ,Janata ,Dala M. Prajwal Revanna ,
× RELATED பாலியல் புகார் பிரஜ்வல் போலீஸ்காவல்...