×

பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானை: வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து கிராமத்தில் முகாமிட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது.

இந்த யானை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு, வெளியே வந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று, அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, உணவு தேடி வெளியே வந்த ஒற்றை யானை, பேரண்டபள்ளி அருகே ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது.

யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், முன்னதாக அவ்வழியாக இருபக்கமும் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். சாலையை கடந்த ஒற்றை யானை, அருகில் இருந்த காவேரி நகர் பகுதிக்கு சென்றது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடந்து சென்றனர். நேற்று பகல் நேரத்தில் காவேரி நகர், கோபசந்தரம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியையொட்டி யானை சுற்றி வந்தது. வனத்துறையினர் தொடர்ந்து போராடி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

மேலும், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு ஓட்டிச்செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானை: வனத்துறையினர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : NATIONAL HIGHWAY ,PERANDAPALLI ,Hosur ,Ozur ,Sanamavu forest ,Osur, Krishnagiri district ,Berandapalli ,Dinakaran ,
× RELATED நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து