×

தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் வாடியது

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு 44 அடி அகலம் 35 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்ட் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ள மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூபி, புளூட்டோ, டொனலட் டக் ஆகியவை ஒரு லட்சம் ரோஜா, கார்னேசன் மற்றும் கிரைசாந்தியம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பல வகையான கார்னேசன், ரோஜா மலர்களை கொண்டு மலர்களால் தேனீ, முயல், மலர் சுவர், பிரமிடு மற்றும் மலர் கொத்து உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் பூங்காவில் செய்யப்பட்டிருந்தது. மேலும், 126வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி கடந்த 10ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை 17 நாட்கள் நடந்தது. மலர் அலங்காரங்களில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான ரோஜா மலர்கள், கிரசாந்தியம் மற்றும் கார்னேசன் மலர்கள் காய்ந்துவிட்டன.

இதனால், மீண்டும் இரு முறை காய்ந்த மலர்களை மாற்றி புதிய மலர்களை வைத்தனர். மேலும், தொடர் மழை காரணமாக மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டிருந்த பெர்ன் புல்மைதானமும் சேறும் சகதியுமாக மாறி பழுதடைந்தது. மலர் கண்காட்சி முடிந்த நிலையில், இந்த மலர் அலங்காரங்களில் உள்ள மலர்கள் வாடி காணப்படும் நிலையில், இதன் அருகே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேசமயம், மாடங்களில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் வாடியது appeared first on Dinakaran.

Tags : Disney World ,Feudy Government Botanical Garden ,Mickey Mouse ,Minnie Mouse ,Cooby ,Pluto ,Donald ,
× RELATED ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று நிறைவு 1.5 லட்சம் பேர் பார்வை