×

உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்: அணைக்கரை கீழணையில் முதலைப்பண்ணை அமைக்க கோரிக்கை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே முதலைகளின் கூடாரமாக விளங்கி வரும் அணைக்கரையில் தினம் தினம் பொதுமக்களை கடித்து குதறும் முதலைகளால் அக்கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையாக அணைக்கரை கீழணையில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக அணைக்கரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கீழணை கட்டப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இந்த அணை வரலாற்று சிறப்புமிக்க அணையாகும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரானது கல்லணை வழியாக அணைக்கரை வந்தடைந்து, இறுதியில் கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் அண்டை மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த முதலைகள் அணைக்கரையில் தஞ்சம் புகுந்தன. ஆரம்பத்தில் ஒரு சில முதலைகளே தென்பட்டு வந்த நிலையில், இனப்பெருக்கம் காரணமாக முட்டையிட்டு தற்போது 150க்கும் மேற்பட்ட முதலைகள் இந்த கீழணையில் உள்ளது.

அணையில் தண்ணீர் வற்றும் காலங்களில் உணவினை தேடி முதலைகள் அவ்வப்போது இடம்பெயர்ந்து அருகிலுள்ள வீரசோழபுரம், கஞ்சம்கொல்லை, கண்டியங்கொல்லை , கோடாலி கருப்பூர், அண்ணங்காரன்பேட்டை, தென்கச்சி பெருமாள் நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தஞ்சம் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனுசனை கடித்தது என்பதுக்கேற்ப, ஆரம்பத்தில் ஆடு, மாடுகளை, கடித்து வந்த முதலைகள் தற்போது கடந்த சில வருடங்களாக ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களையும், ஆடு மாடுகளை மேய்க்கும் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை. முதலையால் கடிபட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று அடிக்கடி முதலை வாயில் அகப்பட்ட மனிதர்கள், அதிலிருந்து மீண்டு படுகாயத்துடன் உயிர்பிழைத்த அதிசயமும் நடந்து வருகிறது. இப்படி நாள்தோறும் ஆடு, மாடுகளையும், மனிதர்களையும் கடித்து, ருசி கண்ட முதலைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறதே தவிர குறையவில்லை. எந்த ஊருக்குள் முதலை புகுந்தாலும் அதனை மீட்டு, மீண்டும் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலே வனத்துறையினர் விட்டு விடுகின்றனர். முதலையை பிடிப்பதும், மீண்டும் ஆற்றில் விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. முதலை அச்சம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும், ஆடு, மாடுகளை மேய்க்கவும் நாள்தோறும் அப்பகுதி மக்கள் உயிர் அச்சத்தோடு செல்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் ஆற்றின் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினாலும், அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மீன்பிடி தொழிலை குலத் தொழிலாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது என்பதால் மீன்பிடி தொழிலை அவர்களால் விட முடியவில்லை. மீன் பிடிப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டு செல்லும் மீனவர்கள் திரும்பி வீடு சேர்வது என்பதே கேள்விக்குறிதான் என்ற நிலை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அணைக்கரையில் முதலைப்பண்ணை அமைக்கப்படும் என்று வெறும் காகித அறிவிப்பு மட்டும் வெளியிடப்படுகிறதே தவிர அதை செயல்படுத்த அரசு முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அணைக்கரையில் முதலைப்பண்ணை அமைத்தால் சாத்தனூர், ஒகேனக்கல் போன்று இந்தப் பகுதியும் சுற்றுலாத் தளமாக மாறும். மேலும் அருகில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கோவில் நகரமான கும்பகோணம் மற்றும் நவகிரக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் இந்த அணைக்கு வந்து முதலைப் பண்ணையில் முதலைகளை பார்த்து செல்வார்கள். இதனால் அரசுக்கு வருவாய் கூடும்.

அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் முதலைகளால் இடையூறு ஏற்படாது என்பதால் மீன்பிடிக்கச் செல்லம் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்கள் எந்த ஒரு அச்சமில்லாமல் ஆற்றுக்கு செல்வார்கள். எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், முதலைகளின் நலன் கருதியும் கீழணையில் முதலைப் பண்ணை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

The post உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்: அணைக்கரை கீழணையில் முதலைப்பண்ணை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tha.Pazhur ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது