×

அடாவடி கட்டண வசூலில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி

புதுச்சேரி, மே 30: புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் சமீபகாலமாக கல்வித்தரம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் குமுறி வருகின்றனர். இதனிடையே இப்பள்ளியில் அடாவடி கட்டண வசூல் நடத்தி வருவதாக கல்வித்துறை இயக்குனரிடம் பாட்டாளி தொழிற்சங்கம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளன. புதுச்சேரி காந்தி வீதியில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. புதுச்சேரி- கடலூர் மறை மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பின்கீழ் இயங்கும் இப்பள்ளிக்கென தனிச்சிறப்பு உண்டு. கடந்த காலங்களில் இப்பள்ளியை நிர்வகித்த பாதிரியார்கள், பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சிறப்புகளை தேடித் தந்தனர். சமீபகாலமாக ெபாதுத்தேர்வுகளில் இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் சரிந்து வருவது வேதனை அளிப்பதாக இப்பள்ளி மீது பற்றுக் கொண்ட கிறிஸ்தவ, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் கூறுகின்றனர். சமீபத்திய அடாவடி கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் குவிந்து வருகின்றன.

குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) கொடுத்து வெளியேற்றுமாறு மிரட்டுவதும், வரம்பு மீறிய கட்டணத்தை துணிச்சலாக வசூலிப்பதாகவும் பாமக தொழிற்சங்கம் நேற்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை சந்தித்து புகார் மனுவை அளித்து முறையிட்டுள்ளன. இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாட்டாளி தொழிற்சங்க பேரவை தலைவர் ஜெயபாலன் தலைமையில் நிர்வாகிகள், கல்வித்துறை இயக்குனரிடம் அளித்துள்ள புகார் மனுவில், புதுவை, பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி வரம்புமீறிய கல்விக் கட்டணக் கொள்ளை அடிப்பதும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் 9ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை தங்கள் பள்ளியின் (10ம் வகுப்பு) தேர்ச்சி விகிதம் பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பெற்றோர்களை கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ் (டிசி) வாங்கச் சொல்லி மிரட்டி வற்புறுத்துவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் போலிச்சான்றிதழில் பணிபுரியும் நபர்கள் மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களின் மீது ஆய்வு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சம்பள முரண்பாட்டை கேட்டு குரல் கொடுத்த 2 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களது மகன்களை டிசி வாங்கச் சொல்லி வற்புறுத்தி, பள்ளிக்கட்டணம் செலுத்தவிடாமல் தடுத்து அலைக்கழித்து, பள்ளி முதல்வர் தேவதாஸ் அவமானப்படுத்தி வெளியே துரத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டுமென இயக்குனரிடம் வலியுறுத்தி இருந்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட கல்வித்துறை இயக்குனர், இதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக பாட்டாளி தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post அடாவடி கட்டண வசூலில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி appeared first on Dinakaran.

Tags : BETHI SEMINAR HIGH SCHOOL ,ADAVADI ,FEE ,Puducherry ,Pethi Seminary High School ,Patali trade union ,Gandhi… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் புதிதாக 3...