×

காஸ் நிறுவன லாபத்தொகையில் பங்குதாரருக்கு ரூ.1 கோடி கொடுக்காமல் மோசடி: தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

தேனி, மே 30: தேனி அருகே காஸ் நிறுவன பங்குதாரருக்கு நிறுவனத்தின் லாபத்தொகையில் ரூ.1 கோடிக்கும் மேல் தராமல் மோசடி செய்ததாக தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தேனி அருகே ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் ராஜரத்தினம்(48). ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சியை சேர்ந்தவர் சம்பத்(50). கடந்த 2013ல் இருவரும் கூட்டுசேர்ந்து தேனியில் காஸ் ஏஜென்சி தொடங்கினர். முன்னதாக ராஜரத்தினம், வங்கி மூலமாகவும், நேரடியாகவும் சம்பத் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோரிடம் ரூ.20 லட்சம் வரை பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் காசாளராக முத்துலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஆரம்பத்தில் நிறுவனத்தில் வரும் லாபத்தொகையில் சிறு தொகையை மட்டும் அவ்வப்போது ராஜரத்தினத்திற்கு சம்பத் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் லாபத்தொகை தருவதை அவர் நிறுத்தினார்.

மேலும், காஸ் ஏஜென்சி நிறுவன கணக்கு விபரங்களை ராஜரத்தினத்திடம் காட்டாமல் சம்பத், அவரது மனைவி சவீதா, காசாளர் முத்துலெட்சமி ஆகியோர் மறைத்துள்ளனர். ஆடிட்டரை அணுகி காஸ் நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கை பார்த்தபோது, ராஜரத்தினத்திற்கு லாபத்தொகையாக ரூ.1 கோடி தரவேண்டியிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜரத்தினம் கேட்டபோது, சம்பத் லாபத்தொகையை தராததுடன், மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நடந்தவை குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சம்பத், அவரது மனைவி சவீதா, கணக்காளர் முத்துலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். அவர்களிடம் இந்த மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி, விசாரணை நடத்தி வருகிறார்.

The post காஸ் நிறுவன லாபத்தொகையில் பங்குதாரருக்கு ரூ.1 கோடி கொடுக்காமல் மோசடி: தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Oonchampatti ,Dinakaran ,
× RELATED தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்