×

ஈரோடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து ரூ.45 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பதுக்கல்

ஈரோடு, மே 30: ஈரோடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து 150 கிலோ கஞ்சா மூட்டைகள் வைத்திருந்த சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ரவி என்கிற ரவிச்சந்திரன் (29) இவர் மீது ஈரோடு போலீஸ் ஸ்டேசன்களில் குற்ற வழக்குகள் உள்ளது. இதனால், ரவிச்சந்திரனை போலீசார் தேடி வந்தனர்.‌ இந்நிலையில், ஈரோடு அருகே புங்கம்பாடி சாணார்பாளையம் பகுதியில் ரவிச்சந்திரன் தங்கி இருப்பதாக கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, போலீசார் சாணார்பாளையம் பகுதியில் தேடிவந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் ரவிச்சந்திரன் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது ரவிச்சந்திரனை போலீசார் பிடித்து விசாரித்ததுடன் வீட்டையும் சோதனையிட்டனர். வீட்டிற்குள் சுமார் 75 பண்டல்களில் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.‌ இதன் மதிப்பு ரூ.45 லட்சமாகும். பின்னர் கஞ்சா மூட்டைகளை ஈரோடு மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

மேலும், ரவிச்சந்திரனுடன் அந்த வீட்டில் இருந்த அவரது தம்பி சங்கர் (25), ஈரோட்டை சேர்ந்த சூர்யா (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே வேறொரு கஞ்சா விற்பனை கும்பலிடம் இருந்து ரவிச்சந்திரன் மிரட்டி வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து ரூ.45 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பதுக்கல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Kumar ,Veerappan Chatram ,Ravi ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு