×

திருக்குறள், தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் பேசிவிட்டு தமிழர் மீது பிரதமர் வெறுப்பை கக்குவது ஏன்?.. ஒடிசா அரசியலில் இன தாக்குதல் நடத்தும் பாஜ


இன்று நேற்றல்ல…. பண்டைக் காலம் முதலே கடல் கடந்தும் கோலோச்சியவர்கள் தமிழர்கள். கடல் கடந்து வெற்றி பெற்ற தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன். இவர் இந்தியாவில் ஆட்சி செய்த பகுதிகள், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, சட்டீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகள் வரை பரந்து விரிந்திருந்தது. தென் கிழக்கு ஆசிய நாடுகளும் இவர் ஆட்சி எல்லைக்குள் இருந்தன. இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக சோழப்பேரரசு திகழ்ந்து. தற்போது உலகெங்கிலும் தமிழர்கள் தடம் பதித்துள்ளனர்.

தமிழர் வரலாறு, பாரம்பரியம் இப்படி பெருமை வாய்ந்ததாக இருக்க, ஒடிசாவில் தமிழரை குறி வைத்து அரசியல் சதுரங்கம் ஆடி வருகிறது பாஜ. அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன் என்ற தமிழர்தான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி தாக்குதலுக்கு ஆளானவர். பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த இவர், அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிஜூ ஜனதா தளத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். நவீன் பட்நாயக்கின் அரசில் வாரிசே இவர்தான் என்று பலராலும் அறியப்படும் அளவுக்கு, பாண்டியனின் ஆளுமை ஒடிசா அரசில் காணப்படுகிறது. மோடியும், அமித்ஷாவும் அவரை குறிவைத்து வசைமாரி பொழிந்து வருகின்றனர்.

ஆனால், பாண்டியன் மீதான தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல், தமிழர் மீதான தாக்குதலாகவே இதனை பாஜ நகர்த்தி வருகிறது. இது, ஒன்றிய பாஜ தலைவர்களுக்கு தமிழர்கள் மீது எந்த அளவுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதற்கான சிறு உதாரணம் தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கடல் கடந்தும் போன தமிழன் நாட்டின் வேறொரு மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தக்கூடாதா, தனது ஆளுமையை நிரூபிக்கக் கூடாதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் முன்வைக்கின்றனர். பாண்டியனுக்கு எதிரான பேச்சு இனத்தின் மீதான தாக்குதலாகவே கருதுவதற்கு இடமளிக்கிறது என்கின்றனர். இது, மோடி மற்றும் அமித்ஷாவின் தமிழக வருகை மீதும் கேள்விகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழகத்துக்கு பல முறை மோடியும் அமித்ஷாவும் படையெடுத்தனர். அப்போதெல்லாம் திருக்குறள், பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டியும், தமிழர் பெருமைகளை கூறியும் பிரசாரம் செய்த மோடிக்கு, ஒடிசா தேர்தலில் மட்டும் தமிழர்கள் மீது ஏன் இப்படி ஒரு வெறுப்பு வந்தது. ஒன்றிய அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கரும், நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனும் தமிழர்களே. அப்படியிருக்க, நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமாக, அந்த மாநில அரசியலில் ஒரு தமிழர் ஒளிர்வது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஏன் கசக்கிறது. ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்கின்ற அளவுக்கு தான் தமிழக தலைவர்கள் இருந்தனர். கிங் மேக்கர் என அறியப்பட்ட காமராஜர், இந்திரா காந்தி பிரதமராகக் காரணமாக இருந்தவர்.

வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர் ஆனது கலைஞரால்தான். இப்படி தமிழக அரசியல் களம் தான் ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது. நாட்டின் உயர் பதவிகளை அலங்கரித்தவர்கள் தமிழர்கள். தமிழரான அப்துல் கலாம், ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி பதவியை அலங்கரித்தனர். இவ்வாறு தேசிய அளவில் மாநிலம் தோறும், துறை தோறும் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஓட்டு வாங்குவதற்காக மோடியும், அமித்ஷாவும் தமிழினத்தையே தாக்கும் வகையில் நடந்து கொள்வது, இவர்களின் தமிழக வருகையை கேள்விக்குரியதாக்கி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடங்கும்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற மோடி, கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் போதும், விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்காக தமிழ்நாடு வருவது, அவரது பேச்சுக்கும் செயலுக்குமான முரண்பாடாகவே தோன்றுகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்வராகுவதற்கு இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், 25 வயது நிரம்பியிருக்க வேண்டும், எம்எல்ஏவாக இருக்க வேண்டும் என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. வேறு மாநிலத்தவர் முதல்வராகக் கூடாது என எந்த விதியும் கூறவில்லை. இதையும் மீறிய இன ரீதியாக பாஜ தாக்குதல் நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்படுகிறது.

அவரும் தமிழர்… இவரும் தமிழர்…
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முனைவர் வெ.இறையன்புவின் மூத்த சகோதரர். குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவில் பதவி வகித்த திருப்புகழ் ஐஏஎஸ், 2001ம் ஆண்டு அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது மீட்புப் பணிகளை விரைவு படுத்தினார். பல்வேறு பணிகளுக்காக நற்பெயர் பெற்ற திருப்புகழ், 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரது செயலாளராக இருந்தார். மோடி பிரதமர் ஆனதும், பிரதமர் அலுவலக பணிக்கு அவர் மாற்றப்பட்டார். 2015ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2015ல் நேபாளத்தில் நிலநடுக்கும் நிகழ்ந்த பிறகு, அந்த நாட்டில் மறு கட்டமைப்பு பணிகளுக்கான ஆலோசனை வழங்க திருப்புகழைத்தான் ஒன்றிய அரசு அனுப்பி வைத்தது. முதல்வராக இருந்ததில் தொடங்கி பிரதமர் ஆன பிறகும் தமிழக ஐஏஎஸ் அதிகாரியை மோடி உடன் வைக்கும்போது, நவீன் பட்நாயக் இதே போன்று ஒருவரை உடன் வைத்துக் கொள்வது மோடி, அமித்ஷாவுக்கு வெறுப்பை உண்டாக்குவது வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

The post திருக்குறள், தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் பேசிவிட்டு தமிழர் மீது பிரதமர் வெறுப்பை கக்குவது ஏன்?.. ஒடிசா அரசியலில் இன தாக்குதல் நடத்தும் பாஜ appeared first on Dinakaran.

Tags : Tamils ,Baj ,Odisha ,Rajendra Cholan ,King ,India ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,Kerala ,Telangana ,Chhattisgarh ,
× RELATED குவைத் அடுக்குமாடி குடியிருப்பு...