×

தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பை, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான வரும் 6ம் தேதி அனைத்து வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பயிலும் பள்ளிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் ெசய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளான வரும் 6ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்நிகழ்வினை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : School Education Secretary ,Kumaraguruparan ,Chennai ,Aadhaar ,School ,Education Department ,Kumaragurubaran ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வித்துறையில் 9 அதிகாரிகள் இடமாற்றம்