×

நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்

சென்னை: இந்திய நீதித்துறையில் கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, தசரா விடுமுறை என்று தொடர் விடுமுறைகள் உள்ளது அபத்தமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறையில் விடுமுறை குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசகரின் கருத்து துரதிஷ்டவசமானது. உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகளாக உள்ளவர்கள், நீண்ட நேரம் பணியாற்றுகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை காலங்களில் தீர்ப்புகள் எழுதுவதிலும், திருத்தங்கள் செய்யும் பணியில் தங்களின் நேரத்தை நீதிபதிகள் செலவிடுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் லோக்சபாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் வெளியிட்ட அறிக்கையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரமே உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம், இரண்டு மடங்குக்கு அதிகமாக வழக்குகளை தற்போதைய நீதிபதிகள் கையாள்கின்றனர். நிலுவையில் 5 கோடி வழக்குகள் உள்ளதாக சஞ்சீவ் சன்யால் கூறும் நிலையில், அதில் 73 சதவீத வழக்குகள் அரசு தாக்கல் செய்தது என்பது அவருக்கு தெரியாது. பொறுப்பற்ற முறையில் நீதித்துறையை விமர்சித்துள்ள சஞ்சீவ் சன்யாலின் கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

The post நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bar Council ,PM ,Economic Advisory Council ,CHENNAI ,YouTube ,Sanjiv Sanyal ,Prime Minister's Economic Advisory Council ,Indian ,Dussehra ,Prime Minister's ,Economic Advisory Committee ,
× RELATED குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 4...