×

நான் நலமாக இருக்கிறேன் வீடியோ வெளியிட்டு வைகோ விளக்கம்

சென்னை: நெல்லைக்கு கடந்த 25ம் தேதி திருமண நிகழ்வுக்கு சென்ற வைகோவுக்கு கால் இடறி விழுந்து வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, வைகோ பற்றி வதந்திகள் பரவிய நிலையில், அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோவில் வைகோ பேசியிருப்பதாவது: சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, ஏறத்தாழ 7000 கி.மீ நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. 4 நாளுக்கு முன்னர் நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில், தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல், பக்கத்தில் உள்ள திண்ணையில் ஏறியதால் இடறி விழுந்து இடது தோள்பட்டை கின்னம் கீழே இறங்கி விட்டது. அதோடு எலும்பும் 2.செ.மீ அளவு உடைந்து விட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக் கூடியவன் வைகோ என்பதை கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இந்த தமிழ்நாட்டில் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கும் இந்த வைகோ முழு நலத்தோடு, பரிபூரண ஆரோக்கியத்தோடு திரும்ப வருவேன்.

அறுவை சிகிச்சை முடிந்தது: இதனிடையே மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: வைகோவுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார். இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்ததால் டைட்டானியம் பிளேட் பொருத்தியுள்ளனர். 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வைகோ இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். மேலும் ஒரு வார காலத்திற்கு பார்வையாளர்கள் யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

 

The post நான் நலமாக இருக்கிறேன் வீடியோ வெளியிட்டு வைகோ விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Wiko ,Chennai ,Vigo ,Nellai ,Apollo Hospital ,Creams Road, Chennai ,Dinakaran ,
× RELATED மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு...