×

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடக்க உள்ள மோடி தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்

* நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது
* தேர்தல் ஆணையத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மனு

சென்னை: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் ேமாடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்வதைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் இன்று மாலை முதல் 3 நாட்களுக்கு தியானம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலின் இறுதி கட்ட மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தியானம் என்ற பெயரில் மறைமுக பிரசாரம் செய்ய இருப்பதாக குற்றம்சாட்டி இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது பாஜ சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடி மே 30, 31 தேதிகளில் பாஜ கட்சி வெற்றிபெற வேண்டும் என்னும் நோக்கில் வாக்காளர்களை கவருவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

இதுபோன்ற தேவையற்ற விளம்பர யுக்திகளால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கோடை விடுமுறை நேரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். பாதுகாப்பு என்ற பெயரில் சுற்றுலா பயணிகளின் வருகையை தடுப்பதால் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், அவர்களது குடும்பங்களும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. பிரதமர் என்ற தகுதியில் அவர் வருவதால் முழு அரசும், அரசு அதிகாரிகளும், இயந்திரமும் அவருக்கு பாதுகாப்பும், இதர வசதிகளும் ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் தேவையில்லாமல் அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கப்படுவதுடன் பணி சுமையும், அரசு அதிகாரிகள் தங்கள் துறை சம்பந்தமாக பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலையும், அரசு இயந்திரம் பிரதமரின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலையும் உருவாகிறது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவழிக்கப்படுவதோடு பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. பிரதமரின் வருகையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து கெடுபிடிகளால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பிரதமர் மோடிக்கு வழங்கியிருக்கும் அனுமதியை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு கொடுத்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி 48 மணி நேர மவுன காலத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக மவுன விரதத்தில் மறைமுகப் பிரசாரமாக இருக்க கூடாது. அதனால் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்திற்கு அனுமதி தரமால் தேர்தல் ஆணையம் அவரது பயணத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரதமரின் இத்தகைய செயல்பாடு தன்னைத்தானே தலைப்புச் செய்திகளில் வைத்திருப்பதற்கு எடுக்கப்பட்ட உத்தி. ஒருவேளை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பயணத்தை ரத்து செய்ய மறுக்கும் பட்சத்தில் அவரது தியான நிகழ்ச்சியை அச்சு அல்லது ஆடியோ ஊடகங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ ஒளிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு நேற்று புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் நாடாளுமன்ற தேர்தலின் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம்தேதி 57 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. எனவே நாளையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில், மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தியானம் செய்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால் மோடி தியானம் செய்யும் நிகழ்வினை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்தால் பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த பாஜ கட்சிக்கும் சாதகமாக அமையும்.

இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை நிறைவு செய்வது என்பது அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்பட்ட விதிமுறை.இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் அன்று மோடியின் தியானத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் அது அவர் பிரச்சாரம் செய்வதாகிவிடும். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். எனவே மோடியின் தியான நிகழ்வை எந்த மீடியாக்களும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு தடை விதித்து தேர்தல் ஆணையம் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றைய தனது பிரசாரத்தில் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி தாராளமாக தியானம் செய்யட்டும். ஆனால், அதை எதிலும் ஒளிபரப்பு செய்யக் கூடாது. அப்படி செய்தால் நாங்கள் புகார் தருவோம். ஏனெனில், அவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் செயலாகும். தியானம் செய்யும் போது யாராவது கூடவே கேமராவை கொண்டு செல்வார்களா?’’ என்றார்.

The post கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடக்க உள்ள மோடி தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Modi ,Kanyakumari Vivekananda Hall ,DIMUKA ,CHENNAI ,PM ,EMADI ,DEMAKA ,
× RELATED கன்னியாகுமரி விவேகானந்தர்...