×

6ம்தேதி பள்ளிகள் திறப்பு; சாக்பீஸ் தயாரிப்பு பணி தீவிரம்

தர்மபுரி: ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தர்மபுரி அருகே சாக்பீஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாக்பீஸ் தயாரிக்கும் பணி குடிசை தொழிலாக நடந்து வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதில், பெரும்பாலும் பெண்களே வேலை செய்கின்றனர். வரும் ஜூன் மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால், சாக்பீஸ் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. உப்பளங்களில் கிடைக்கும் ஜிப்சம் பவுடர்தான் சாக்பீஸ் தயாரிப்புக்கான மூலப்பொருள். இதை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும் போது நீள்வடிவில் சாக்பீஸ் தயாராகிவிடுகிறது. அச்சில் பதிக்கும்போது ஒட்டாமல் இருக்க மண்ணெண்ணெய் மற்றும் முந்திரி எண்ணெய் கலவையைத் தடவுகின்றனர்.

தமிழகத்தில் தர்மபுரியை தவிர சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் சாக்பீஸ் செய்யப்படுகிறது. கலர் சாக்பீஸ் தேவையென்றால் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலக்கின்றனர். அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் 2 நாள் காயவைத்து, ஒரு சிறிய அட்டை பெட்டியில் 120 சாக்பீஸ்களாக அடுக்கி விற்பனைக்கு அனுப்புகின்றனர். தர்மபுரியில் தயாரிக்கப்படும் சாக்பீஸ் தமிழ்நாடு, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆர்டரின்பேரில் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது

இதுகுறித்து தர்மபுரி சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள முனியப்பன் கூறியதாவது: 7 விதமான வண்ண நிறங்களில் சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. ஆர்டர் மூலமாகவும், நேரில் வந்தும் சாக்பீஸ் வாங்கி செல்கின்றனர். சில்லரையிலும் விற்பனை செய்கிறோம். இதை நாங்கள் குடிசை தொழிலாக செய்வதால், எங்கள் தொழிலகத்தில் 15 பேருக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிகள் திறக்க இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் அதிகளவில் சாக்பீஸ் உற்பத்தி செய்யப்பட்டு அட்டை பெட்டிகளில் பேக் செய்யும் பணி நடந்து வருகிறது, என்றார்.

The post 6ம்தேதி பள்ளிகள் திறப்பு; சாக்பீஸ் தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sockpeas ,Dharmapuri ,Vellichandi ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது