×

தூத்துக்குடியில் நாவல் பழம் விற்பனை ஜரூர்: கிலோ ரூ.480க்கு விற்பனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாவல் பழம் கிலோ ரூ.480க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட நாவல் பழம் கிடைப்பது அரிதாகும். நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம் மட்டுமல்லாது இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் வரப்பிரசாதமாக உள்ளது. நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதை நீரில் கலந்து குடிக்கலாம். தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்பு பலம் பெறும், தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும், வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும், பசியைத் தூண்டக்கூடியது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து, நாவல்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தி அடையும், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட அசிடிட்டி பிரச்னை உடனே சரியாகும் என பல்வேறு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு நாவல் பழம் வரத்துவங்கியுள்ளது. தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் அருகே நாவல்பழங்களை விற்பனை செய்து வரும் குருராஜா என்பவர் கூறுகையில், ‘‘நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீசன் நேரத்தில் வரும் பழங்களை விற்று வருகிறேன். தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளது. முதன்முதலாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் சீசன் முழுமையாக தொடங்கிய பிறகு மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். தற்போது, நான் மட்டும்தான் பழம் வாங்கி வந்துள்ளேன். இன்றைய நிலையில் ஒரு கிலோ ரூ.480க்கு விற்பனையாகிறது. சீசன் முழுமையாக தொடங்கிய பின்பு அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்போது ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்கப்படும். நாவல் பழத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதால் சர்க்கரை நோயாளிள் இதனை அதிகமாக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக அனைவருக்குமே இந்த பழம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியதுதான். இதன் விதையை காயவைத்து பொடி செய்து, பால் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம்’’ என்றார்.

The post தூத்துக்குடியில் நாவல் பழம் விற்பனை ஜரூர்: கிலோ ரூ.480க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...