×

மலைப்பகுதிகளில் லேசான மழை; பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு

விகேபுரம்: நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டி எடுத்தது. இந்த மாதம் தொடக்கத்திலும் வெயில் தொடர்ந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய மறு நாள் முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கத்தரி வெயில் சூழ்நிலைக்கு மாறாக குளுகுளு காற்று வீசியது. கடந்த இரண்டு மாதங்களாக கடும் கோடை வெயிலால் வாடி வதங்கி வந்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இந்நிலையில் கத்தரி வெயில் நேற்றுடன் நிறைவு பெற்றது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் லேசான மழை தொடர்ந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துள்ள மழையால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.பாபநாசம் அணையில் 69.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 1.05 அடி உயர்ந்து 70.85 அடியானது. அணைக்கு விநாடிக்கு 995.139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 274.75 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 83.69 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 86.81 அடியாக உள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 3 மிமீ, சேர்வலாறு அணையில் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 129.38 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 45 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கொடுமுடியாறு அணையில் 37.25 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 37.75 அடியானது. அணைக்கு விநாடிக்கு 19 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று அறவே மழை இல்லை. மாவட்டத்தில் ஜூன் 1ம்தேதி தென்மேற்கு பருவமழை துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த காலத்திற்கு முன்னதாகவே துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே தென் மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post மலைப்பகுதிகளில் லேசான மழை; பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Papanasam dam ,Vikepuram ,Western Ghats ,Nellai district ,Babanasam Dam ,Dinakaran ,
× RELATED கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம்