×

கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!

சென்னை : கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சட்டத்தில் இடம் இல்லாததால் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரிக்க முடியாது என்றும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி அதில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து சசிகலா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டாலும் கூட சட்ட பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என கேரள ஐகோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி, கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்க அனுமதி வழங்கிய நிலையில், ரூ.50 லட்சத்தை கணவர் சசிக்குமாரின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக முதலீடு செய்யவும் அதில் இருந்து காலாண்டு வட்டியை எடுத்து பயன்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல. அதற்கு பெரும் நிதி தேவைப்படும். ஏற்கனவே மருத்துவமனையில் லட்ச கணக்கில் செலவிடப்பட்டுள்ள நிலையில், மனைவிக்கு சொத்துக்களை விற்க அனுமதி வழங்காவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். ஆகவே உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற சொல்வது முறையற்றது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். கணவரின் சொத்துக்களுக்கு மனைவியை பாதுகாவலராக நியமிக்கிறோம் ,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!