×

குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய்!

நன்றி குங்குமம் டாக்டர்

தீர்வு என்ன?

உலகம் முழுவதும் ஆறு கோடி மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். சில குழந்தைகளுக்கு அதிகப்படியான காய்ச்சலின்போது மட்டும் இது வரும். சில வலிப்புகள் எதனால் ஏற்படுகின்றன, குழந்தைகளுக்கு வராமலிருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்…

வலிப்பு என்பது என்ன?

நம் உடலிலுள்ள மூளை நரம்புகள் மற்றும் நரம்பணுக்களில் மின்னோட்டம் சீராகப் பாய்ந்து நம் உடலியல் செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். இந்த மின்னோட்டத்தின் அளவில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் நரம்பணுக்கள் பாதிப்படைந்து வலிப்பு ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு, அதிகப்படியான காய்ச்சல் போன்றவற்றால் வலிப்பு வரும் (Febrile Seizures). இந்த வகை வலிப்பு குறித்து பெற்றோர்கள் அதிகம் பயம்கொள்ளத் தேவையில்லை. காய்ச்சலுக்கோ, மூளை பாதிப்புக்கோ மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் வலிப்பை உடனடியாக குணப்படுத்திவிட முடியும்.

சில குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் இன்றி அடிக்கடி வலிப்பு ஏற்படலாம். ஒருநாளில் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் கூட வலிப்பு வரும். இந்த பாதிப்புகள் இருந்தால், அந்தக் குழந்தைகள் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இதற்கு உரிய சிகிச்சை அவசியம்.

காரணங்கள்

*பெரும்பாலான குழந்தைகள் அதிக காய்ச்சலால் வரும் வலிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். ஆறு மாதம் முதல் ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகள் தீவிரமான காய்ச்சலுக்கு உள்ளாகும்போது உடலின் மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வலிப்பு ஏற்படலாம்.

*பெற்றோருக்கு வலிப்புநோய் இருந்தால், மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கும் அது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

*மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் ஏற்படும் மின்னோட்ட மாற்றத்தால் வலிப்பு ஏற்படலாம்.

*நம் உடலில் இயற்கையாக நிகழும் வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றங்களும் காரணியாக அமையலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்!

*மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பும் வலிப்புக்குக் காரணமாகலாம்.

*விபத்து காரணமாக ஏற்படும் மூளை பாதிப்புகள், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு, மூளையில் ரத்தம் உறைதலால் உண்டாகும் மூளைக்கட்டிகள் போன்றவற்றாலும் வலிப்பு ஏற்படலாம்.

*நோய்த்தொற்றின் காரணமாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் வலிப்பு வரலாம்.

அறிகுறிகள்

கை, கால் இழுத்துக்கொள்வது மட்டும் வலிப்பு கிடையாது. உடலியல் மாற்றங்களைப் பொறுத்து பல வகையான வலிப்புநோய்கள் ஏற்படலாம். நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, சில நிமிடங்கள் தன்னை மறந்து ஓர் இடத்தில் அமைதியாக நின்று, மீண்டும் விளையாட்டைத் தொடரும். இது போன்ற நேரத்தில் குழந்தையின் கண்கள் மட்டும் வேகமாக மூடித்திறக்கும் (Absence Seizures). திடீரென உடலின் ஏதேனும் ஒரு பாகம் மட்டும் லேசாக வெட்டியிழுக்கும் (Focal Seizures). அதேபோல, உடலின் ஏதேனும் ஒரு பகுதி மட்டும் திடீர் அசைவுகளுக்கு உட்படும் (Myoclonic Seizures). இப்படி, வலிப்பு பல வகைகளில் வெளிப்படும்.

சிகிச்சைகள்

*70 சதவிகித வலிப்புநோய்களை உரிய சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

*சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும். அது பற்றி அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்பிட்ட காலத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் சரிசெய்துவிட முடியும்.

*குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வலிப்பு வருகிறது எனில், ஈஈஜி, எம்ஆர்ஐ, பெட், ரத்தப் பரிசோதனை போன்றவற்றைச் செய்து, முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

*தொடர் வலிப்பால் அவதிப்படுபவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வலிப்புநோய்க்குத் தீர்வு காணலாம்.

*மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கீட்டோஜெனிக் டயட் (Ketogenic Diet) முறையைப் பின்பற்றலாம். அதிக கொழுப்பு, தேவையான புரதம், குறைவான கார்போஹைட்ரேட் என அமைந்திருக்கும் உணவு முறை இது.

*`டீப் பிரெய்ன் ஸ்டிமுலேஷன்’ என்று சொல்லப்படும் கழுத்து நரம்பு சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

தடுக்கும் முறைகள்

* கர்ப்பிணிகள் மின்சாதனங்களை கவனமாகக் கையாள வேண்டும்.

*கர்ப்பிணிகள் மருத்துவர் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது.

*பெற்றோருக்கு வலிப்புநோய் பாதிப்பு இருந்தால், குழந்தை கருவிலிருக்கும்போதே அதற்கு வலிப்புநோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

*கர்ப்பிணிகளுக்குப் பனிக்குடம் உடைந்த சில மணி நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்துவிட வேண்டும். இதனால் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

*குழந்தைக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு இருந்தால், அதற்கான சிகிச்சைகளில் அலட்சியம் காட்டக் கூடாது.

*குழந்தைகள் அதிக உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகிறார்கள்; ரத்தக் காயம் எதுவும் இல்லை; அதனால் பிரச்னையில்லை என்று அலட்சியமாக நினைக்காமல், மருத்துவரிடம் சென்று ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

முதலுதவிகள்

*வலிப்பு ஏற்பட்டவுடன் பதற்றம்கொள்ளாமல் குழந்தையைத் தரையில் ஒருபுறமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.

*வீட்டின் ஜன்னல்கள், கதவுகளைத் திறந்து போதுமான காற்றோட்டத்தை உறுதிசெய்யுங்கள்.

*இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால் அவற்றைத் தளர்த்திவிடுங்கள்.

*கண்ணாடி, பெல்ட் போன்றவற்றை உடனே நீக்குங்கள்.

*படுக்கவைத்தபடி, காற்றோட்டமான பயணத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

*எந்த வகையான இரும்புப் பொருளையும் குழந்தையின் கைகளில் கொடுக்கக் கூடாது.

*கூர்மையான பொருள்களை அவர்களைவிட்டுத் தள்ளிவையுங்கள்.

*குழந்தைக்கு நினைவு திரும்பும்வரை தண்ணீர் உட்பட எதையும் குடிக்கவோ, சாப்பிடவோ கொடுக்கக் கூடாது.

*வலிப்பு ஏற்படும்போது குழந்தையின் கைகால்களில் உதறல் ஏற்படுகிறது என்றால், அதைத் தடுக்க முயல வேண்டாம்.

*வலிப்பின்போது சில குழந்தைகள் நாக்கைக் கடிப்பதுண்டு. அதைத் தடுக்க நினைத்து, வாய்க்குள் துண்டு, பஞ்சு போன்ற எதையும் வைக்கக்கூடாது.

தொகுப்பு: லயா

The post குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,
× RELATED அன்றாட பயன்பாட்டுக்கான குறிப்புகள்