×

லோக் ஜனசக்தி கட்சிக்கு பிரசாரம்; சட்டக் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலை: பீகாரில் பதற்றம்

பாட்னா: பீகாரில் லோக் ஜனசக்தி கட்சிக்கு பிரசாரம் செய்த மாணவர் சட்டக் கல்லூரி வளாகத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில், நேற்று முன்தினம் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஹர்ஷ் ராஜ் (22) என்பவர், தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த போது, அவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மடக்கியது. அவர்கள் திடீரென அவரை, ஹாக்கி ஸ்டிக்ஸ், இரும்பு கம்பிகள், செங்கல்கள் மற்றும் குச்சிகளை கொண்டு தாக்கியது. படுகாயமடைந்த ஹர்ஜ் ராஜ், ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்வு முடிந்து வெளியே வந்த ஹர்ஷ் ராஜை, சட்டக் கல்லூரி வளாகத்தின் ஆடிட்டோரியம் அருகே 10க்கும் மேற்பட்டோர் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த ஹர்ஷ் ராஜ், பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தன் யாதவை கைது செய்துள்ளோம். குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் அடையாளம் கண்டு தேடி வருகிறோம்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஹர்ஜ் ராஜ் போட்டியிட திட்டமிட்டிருந்தார். அதனால் அவரை ஒரு கும்பல் கொன்றுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) வேட்பாளர் சாம்பவி குணால் சவுத்ரிக்கு ஆதரவாக ஹர்ஷ் ராஜ் சமஸ்திபூரில் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். இதனால் அரசியல் காரணங்களுக்காக ஹர்ஷ் ராஜ் கொல்லப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர். மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்தால், கல்லூரியில் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

The post லோக் ஜனசக்தி கட்சிக்கு பிரசாரம்; சட்டக் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலை: பீகாரில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Lok Janashakti Party ,Bihar ,Patna ,Patna, Bihar ,Harsh ,
× RELATED இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு மோடி...