×

ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி

சேலம்: இரட்டிப்பு லாபம் தருவதாக 4 ஆயிரம் பேரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறி நிறுவனத்தின் உரிமையாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் திடீரென அவர் ரோட்டில் படுத்து புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக் திலக் (40). இவர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் வைத்துள்ளார். இந்த கம்பெனியின் கிளை தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூரில் உள்ளது. இந்த நிறுவனத்தில், ஒரு நபர் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் அந்த பணத்தை ஒரு வருடத்தில் இரட்டிப்பு செய்து தருவதாக தீபக் திலக் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தார். இதனை நம்பி 4 ஆயிரம் பேர் அவரிடம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அவர் கூறியபடி பணத்தை இரட்டிப்பு செய்து திருப்பி தரவில்லை. இதனால் பணத்தை முதலீடு செய்தவர்கள், தீபக் திலக்கை அடிக்கடி தொடர்பு கொண்டு கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று அவர், சேலத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்துள்ளார். பணம் செலுத்தியவர்களில் ஒருவர், அவரை பார்த்ததும், பாதிக்கப்பட்ட அனைவரையும் வரவழைத்துள்ளார். பின்னர் தீபக் திலக்கை பிடித்து புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் டெபாசிட் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் மக்கள் அவரை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி தரவேண்டும் என கேட்டுள்ளனர். அவரை தாக்கவும் முற்பட்டனர். அந்த நேரத்தில் மக்களின் பிடியில் இருந்து தப்பி திடீரென ஓட்டலில் இருந்து வெளியே ஓடி வந்த தீபக் திலக், ஓட்டலின் முன்புள்ள ரோட்டில், தன்னை மக்கள் தாக்குவதாக கூறி சட்டையை கழற்றியபடி படுத்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த அழகாபுரம் போலீசார், அவரை மீட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மீது திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பணம் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைத்த சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் அவர் ஏமாற்றிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபக் திலக் விவகாரம் குறித்து திருப்பூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் ஒப்படைக்க சேலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Deepak Tilak ,Tiruppur District ,Alampalayam ,Dinakaran ,
× RELATED நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது