×

வாரணாசியில் வாக்குகள் வித்தியாசம்; 2014, 2019ல் ஏறுமுகமாக இருந்தது 2024ல் சரியுமா?: காங்கிரஸ் வேட்பாளரின் பரபரப்பு பின்னணி இன்றிரவு தொகுதியில் தங்கும் மோடி

புதுடெல்லி: வாரணாசியில் மோடி வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், அவர் எத்தனை வாக்குகள் வித்தியாசம் பெறுவார் என்பது தான் பிரச்னையாக உள்ளது. இன்றிரவு வாரணாசியில் தங்கும் மோடி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 7வது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவையின் மீதே உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் மோடிக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் அஜய் ராயும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதர் ஜமால் லாரியும் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் மோடி வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், எத்தனை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்லப் போகிறார்? என்பது குறித்தே வாரணாசியில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2014ல் மோடி முதல்முறையாக வாரணாசியில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். ஆனால், 2 லட்சம் வாக்குகளைப் பெற்ற கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவினார். கடந்த 2019ம் ஆண்டில், காங்கிரஸ் பொதுச் ெசயலாளரும், உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் இருந்த பிரியங்கா காந்தி, மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடைசி நேரத்தில் தான் வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். தற்போது நடக்கும் தேர்தலில் கூட, எதிர்க்கட்சிகள் சார்பில் பிரபலமான அல்லது வலுவான வேட்பாளரை மோடிக்கு எதிராக நிறுத்தவில்லை. கடந்த 2009ம் ஆண்டு முதல் வாரணாசியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜய் ராய், ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் இருப்பதால், இந்து மதத்தின் அடையாள மையமாக உள்ளது. இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை தன் வாழ்வில் கடைபிடித்து வரும் பிரதமர் மோடி, வாரணாசியை தேர்வு செய்து தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டுள்ளார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கூட அவர் போட்டியிடுவதில்லை. உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் வாரணாசி தொகுதி அமைந்துள்ளதால், மோடி வாரணாசியில் போட்டியிட்டது பாஜகவுக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. கிழக்கு உத்தரபிரதேசத்தில் பல தொகுதிகளில் பாஜக வெற்றிபெற உதவியது. மோடியால் பாஜகவின் மற்ற வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெற்றுவிடுகின்றனர்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வாரணாசியில் முகாமிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தலைவர்கள் பல்வேறு சாதிகள், பிரிவுகள் மற்றும் சமூகங்களை சந்தித்து மோடியின் வெற்றி வித்தியாசத்தை மேலும் அதிகரிக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். கடந்த 2014ல் 3.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடி, 2019ல் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு வைத்து களப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். வாரணாசியில் 20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால் வாக்கு வித்தியாசம் ஏறுமுகமாக இருக்குமா, சரியுமா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில்தான் தெரியும். வரும் ஜூன் 1ம் தேதி வாரணாசியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றிரவு (மே 29) வாரணாசியில் மோடி தங்குகிறார். அப்போது முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் வேட்பாளரான அஜய் ராய், தனது அரசியல் வாழ்க்கையை பாஜகவில் இருந்துதான் தொடங்கினார். ஆரம்பத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பு, பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் இருந்தார். அதனால் பாஜக தலைவர்கள் பலருடனும் அவருக்கு தொடர்பு உண்டு. 1990ம் ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் பிரச்னை எழுந்த போது, அந்த இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். பாஜகவில் அஜய் ராய் இருந்தபோது மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2009ல் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்; பின்னர் 2012ல் காங்கிரசில் இணைந்தார். சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளில் அடுத்தடுத்து இணைந்த போதும், ​​வாரணாசி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 முதல் ேபாட்டியிட்டு வருகிறார். ஆனால் ஒரு முறை கூட அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 2014ல் வாரணாசியில் மோடி வெற்றி பெற்ற பின்னர், காசி நகரம் முழுமையாக மாறிவிட்டது என்கின்றனர். சாக்கடை கழிவுநீர், வண்டல் மண்ணால் நிரம்பிய கங்கை ஆற்றுக் கழிவுகள் போன்றவை வெளியேற்றும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சடலங்கள் மிதக்கும் கங்கையில் இப்போது படகு சவாரி செய்வது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தினசரி கலாசார நிகழ்ச்சிகள், அதிகாலை யோகா, இரு வேளையிலும் ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. குப்பை நகரமாக இருந்த காசியை, ஒரு கலாசார நகரமாக எப்படி மாற்ற முடியும் என்பதை வாரணாசியில் மோடி செய்து காட்டியுள்ளார் என்று காசி மக்கள் கூறுகின்றனர்.

The post வாரணாசியில் வாக்குகள் வித்தியாசம்; 2014, 2019ல் ஏறுமுகமாக இருந்தது 2024ல் சரியுமா?: காங்கிரஸ் வேட்பாளரின் பரபரப்பு பின்னணி இன்றிரவு தொகுதியில் தங்கும் மோடி appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Congress ,Modi ,NEW DELHI ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில்...