×

திருச்சியின் முதல் ஜீரோ மைதா சர்க்கரை பேக்கரி!

நன்றி குங்குமம் தோழி

வெள்ளை நிற உணவுகள் உடலுக்கு கேடு என்று பல காலமாக மருத்துவர்கள் மட்டுமில்லாமல், உணவு ஆலோசகர்கள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் பலர் அதனை தவிர்த்து அதற்கான மாற்று சிறுதானியம் என்று அதில் பலவிதமான உணவுகளை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் முழுக்க முழுக்க பேக்கரி உணவுகளான கேக், பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் உணவினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திருச்சியை சேர்ந்த விஷ்ணுபிரியா. தன் குழந்தைகளுக்காக செய்ய ஆரம்பித்தவர் தற்போது இதனை ஒரு சிறு ெதாழிலாக செய்து வருகிறார். இவரின் ‘ழகரம் பேக்ஸ்’ நிறுவனம் முழுக்க முழுக்க சிறுதானியங்கள் மட்டுமே பயன்படுத்தி உணவுகளை தயாரித்து வருகிறது.

‘‘நான் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். திருமணத்திற்குப் பிறகு திருச்சி திருவானைக்காவலில் செட்டிலாயிட்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் நான் வேலைக்கு போகவில்லை. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கிய உணவுகள் மேல் தனிப்பட்ட விருப்பம் உண்டு. வீட்டிலும் சின்னச் சின்ன ஆரோக்கிய விஷயங்களை கடைப்பிடிப்பேன். எனக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், உணவுப் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து கொடுத்தேன்.

ஆனால் இரண்டாவது குழந்தையின் கதையே வேறாக இருந்தது. அவங்களுக்கு நான்கு மாதம் வரைதான் என்னால் தாய்ப்பால் கொடுக்க முடிந்தது. அதன் பிறகு தாய்ப்பால் கொடுக்க முடியாததால், அதற்கு மாற்று உணவினை நான் தேட ஆரம்பித்தேன். மேலும் எனக்கு டின் உணவுகளும் கொடுக்க விருப்பமில்லை. எல்லாவற்றையும் விட குழந்தையின் ஜீரணசக்தியினை பாதிக்காத உணவுகளாக இருக்க வேண்டும்.

முதலில் நவதானிய கஞ்சி கொடுக்க துவங்கினேன். ஒரே மாதிரியான கஞ்சி கொடுப்பதற்கு அதில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்தால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் சிறுதானியங்களில் முளைக்கட்டிய கஞ்சிகளை தயாரிக்க ஆரம்பித்தேன்.

அதன் தொடர்ச்சியாக அதில் களி, பிஸ்கெட் எல்லாம் வீட்டில் இருந்தபடியே செய்ய துவங்கினேன். என் குழந்தைகளின் தேவைக்காகதான் நான் இதை செய்ய ஆரம்பித்தேன். அப்ேபாது எனக்கு தெரியாது, இதுவே என்னுடைய தொழிலாக மாறும் என்று. சிறுதானியங்களில் தின்பண்டங்கள் செய்ய துவங்கிய பிறகு என்னுடைய உணவுகளில் மைதா, சர்க்கரை, டால்டா எதுவுமே சேர்த்துக் கொள்ள மாட்டேன். சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை டால்டாவிற்கு மாற்றாக ெநய் மட்டுமே பயன்படுத்தினேன்.

பிஸ்கெட் செய்ய துவங்கியதும், அடுத்த கட்டமாக கேக் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதன் பக்குவம் எனக்கு சரியாக ெதரியவில்லை என்பதால் எங்க வீட்டின் அருகே உள்ள பேக்கரியில் கோதுமை, நெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தி கேக்கினை தயாரித்து தரும்படி கேட்டேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். அந்த நிராகரிப்பு தான் என்னை சிறுதானியத்தில் பேக்கரி உணவுகளை செய்யத் தூண்டியது’’ என்றவர் தன் பேக்கரி நிறுவனம் உருவானது குறித்து விவரித்தார்.

‘‘ஒருநாள் எங்க வீட்டிற்கு அருகே ஃபுட் ஸ்டால் ஒன்றை போட இருப்பதாக தெரிந்தவர் தெரிவித்தார். அவர்தான் என்னை அதில் ஒரு ஸ்டால் எடுத்து அதில் என் தயாரிப்பு உணவுகளை வழங்க சொன்னார். நானும் ராகி, கம்பு, வரகு ஆகியவற்றில் செய்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை வியாபாரம் செய்தேன். பலரும் என்ன பிஸ்கெட் என்று கேட்டார்களே தவிர வாங்க முன்வரவில்லை. ராகி பிஸ்கெட் சுவையாக இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.

சில மணி நேரம் கழித்து ஒரு பெண் என் ஸ்டாலில் பிஸ்கெட் ஒன்றை வாங்கிச் சென்றார். வாங்கியவர் மறுபடியும் இரண்டு பிஸ்கெட் வேண்டும் என்றார். பிறகு அரை மணி நேரம் கழித்து அதே பெண் தன் குடும்பத்தினரை அழைத்து வந்து விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து பிஸ்கெட்களையும் வாங்கிச் சென்றுவிட்டார். மேலும் ஆர்டர் முறையில் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் மூலமாக அவரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சொல்ல… அப்படித்தான் ‘ழகரம்’ உருவானது.

பொதுவாகவே சிறுதானியங்களில் செய்யப்படும் தின்பண்டங்கள் சுவையாக இருக்காது என்றுதான் இன்றுவரை பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதை பக்குவமாக செய்தால் அதன் சுவை அலாதியாக இருக்கும். நான் இதனை நன்கு சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்தி, முளைக்கட்டி அதன் பிறகு மறுபடியும் நன்கு வெயிலில் காயவைத்து மாவாக அரைத்து அதில்தான் பிஸ்கெட்களை செய்து வருகிறேன்.

சாதாரணமாகவே சிறுதானியங்கள் ஆரோக்கியமானது. அதை முளைக்கட்டி செய்யும் போது அதன் ஆரோக்கியம் இருமடங்காகும். ஒவ்வொரு உணவுகளையும் என் குழந்தைகளுக்கு எப்படி பார்த்து பார்த்து செய்கிறேனோ அதே போல்தான் வாடிக்கையாளர்களுக்கும் செய்து கொடுக்கிறேன். தற்போது பிஸ்கெட் மட்டுமில்லாமல், கேக், கப் கேக், செலிபிரேஷன் கேக் என பல வகை கேக்குகளையும் தயாரித்து விற்பனை செய்கிறேன். வயதானவர்கள் பெரும்பாலும் கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் மற்றும் பன்களை அதிகம் விரும்புகிறார்கள்.

நான் தனியாக கடை எல்லாம் வைத்து நடத்தவில்லை. ஆனால் எங்களின் ெபாருட்கள் தயாரிக்க அதற்கான சிறப்பு மெஷின்களை வாங்கி ஒரு யூனிட் அமைத்திருக்கிறேன். ஆர்டரின் பேரில்தான் செய்து தருவதால், அனைத்து பொருட்களையும் ஃப்ரெஷ்ஷாக கொடுக்க முடிகிறது. சொல்லப்போனால் எங்களுடையதுதான் திருச்சியில் முதல் ஜீரோ மைதா மற்றும் சுகர் தயாரிப்பு பேக்கரி. கேக்கிற்கு முழுக்க முழுக்க கோதுமை, நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, நெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறுதானிய கேக்குகளும் தயாரித்து தருகிறோம். சிக்னேச்சர் கேக் என்றால், பிளாக் மற்றும் வைட் ஃபாரஸ்ட் கேக், சாக்லேட் மற்றும் ரோஜா இதழ்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு கொண்டு ரோஸ் மில்க் கேக் மற்றும் பனங்கற்கண்டு மூலம் பட்டர் ஸ்காட்ச் கேக்குகளை குறிப்பிடலாம்.

எனக்கான அடையாளத்தினை நான் ஏற்படுத்த சுமார் ஐந்தாண்டு காலமானது. இந்தக் காலக்கட்டத்தில் தொழிலில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், மனம் தளராது உழைத்தேன். வங்கியில் கடன் பெற்று என் யூனிட்டிற்கான தொழில்நுட்பம் வாய்ந்த மிஷின்களை வாங்கினேன். திருச்சி மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்க ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறேன். தற்போது இங்கு ஐந்து பெண்களை வேலைக்கு நியமித்து இருக்கிறேன். வருங்காலத்தில் அனைத்து ஊர்களிலும் யூனிட் ஒன்றை துவங்கும் எண்ணம் உள்ளது’’ என்ற விஷ்ணுபிரியா சிறுதானிய பேக்கரி உணவுகள் தயாரிப்பு குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.

தொகுப்பு: திலகவதி

The post திருச்சியின் முதல் ஜீரோ மைதா சர்க்கரை பேக்கரி! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trischi ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் பிரம்பை...