×

வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றம்

*சிறுமுகை வனத்துறையினர் நடவடிக்கை

மேட்டுப்பாளையம் : வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்களை வேரோடு சிறுமுகை வனத்துறையினர் அகற்றினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதி அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. சமீபகாலமாக இந்த காடுகளில் சீமை கருவேல மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை அகற்றும் பணியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பசுமையான காடுகளில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து பரவும் அந்நிய தாவரங்கள் இயற்கை சூழலை கடுமையாக பாதித்து வருகின்றன. யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்கு தேவையான மரங்கள், செடி,கொடிகள், மூலிகை தாவரங்கள் உள்ளிட்டவற்றை வளர விடாமல் பல்கி பரவி வரும் தேவையற்ற அந்நிய செடிகளில் முதன்மையாக கருதப்படுவது சீமை கருவேல மரங்கள் ஆகும்.

ஆரம்ப காலகட்டங்களில் ஊரை ஒட்டிய வன எல்லைகளில் பெருமளவு வளர்ந்திருந்த இந்த சீமை கருவேல மரங்கள் தற்போது காடுகளுக்குள்ளும் பரவி வனத்தின் நீர் ஆதாரங்களை பாழ்படுத்துவதோடு, வன உயிரினங்களின் உடல் நலத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக டெல்லி முள் மரம் என்று அழைக்கப்படும் சீமை கருவேல மரங்களில் காய்க்கும் விதை மற்றும் காய்களை உண்ணும் வனவிலங்குகளுக்கு கடுமையான வயிற்று உபாதைகள் ஏற்படும்.

இதனையடுத்து தமிழக அரசின் தேவையற்ற அந்நிய களைச்செடிகள் அகற்றும் திட்டத்தின் கீழ் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம், பெத்திக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வனப்பகுதிக்குள் வேரோடு வெட்டி அகற்றப்பட்ட சுமார் 800 டன் சீமை கருவேல மரங்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு விறகுகளாக வன எல்லைப்பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ‘‘ஆரம்ப காலகட்டங்களில் வன எல்லைப்பகுதிகளில் மட்டுமே வளர்ந்திருந்த இந்த சீமை கருவேல மரங்கள் தற்போது வனப்பகுதிக்குள் பரவி வருகின்றன. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட நீராதாரங்கள் பெருமளவு வற்றி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த சீமை கருவேல மரத்தின் காய் மற்றும் விதைகளை உண்ணும் வனவிலங்குகளும் வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு வனத்தினுள் அந்நிய களைச்செடிகள் அகற்றும் திட்டத்தின் கீழ் தற்போது வனப்பகுதிக்குள் ஊடுருவி உள்ள சீமை கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்த மரங்கள் நன்கு எரியும் தன்மையுடைய மரங்கள் என்பதால் அரசின் அனுமதி கிடைத்தவுடன் இவற்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வனப்பகுதிக்குள் நாவல், விளா, மூங்கில், கொடுக்காப்புளி உள்ளிட்ட பல்லுயிர்கள் விரும்பி உண்ணும் மரங்கள் நடவு செய்து வளர்க்கப்படும்’’ என தெரிவித்தார்.

The post வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Sirumugai forest ,Mettupalayam ,Sirumugai ,forest department ,Mettupalayam, Coimbatore district ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...