×

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதியில்லை

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திண்டுக்கல் : நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஒ.,சேக் முகையதீன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை நாளன்று அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் காலை 7.00 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும். பாதுகாப்பு அறை திறக்கப்படுவது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு கொண்டு வரப்படுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள், சட்டமன்றம் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் என மொத்தம் 84 அமைக்கப்படவுள்ளது.வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்த 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண்பார்வையாளர்கள் 102, கண்காணிப்பாளர்கள் 102, உதவியாளர்கள் 102, அலுவலக உதவியாளர்கள் 102 என மொத்தம் 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும், வாக்கு எண்ணும் நாளன்று, வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 15 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வீதம் 90 முகவர்களும், அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணும் மேஜைக்கு 9 முகவர்களும் என மொத்தம் 99 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர்களின் கையொப்பம் பெற்று சட்டமன்ற தொகுதிக்கு 15 முகவர்களை தனியாகவும், அஞ்சல் வாக்குச் சீட்டுகளுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். முகவர் படிவம் மற்றும் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு(காலை 8.00 மணிக்கு) ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும்.மொபைல் போன், லேப்டாப், வீடியோ கேமரா போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து வரக் கூடாது.

வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளரது முகவர்கள் என்ற வரிசையில் அனுமதிக்கப்படுவர்.வேட்பாளரோ அல்லது அவரது தேர்தல் முகவரோ வாக்கு எண்ணிக்கை மையத்தில் எந்தவொரு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அறைக்கும் செல்லலாம். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வரக்கூடாது. அவ்வாறு ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத நபர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு வாக்குச்சாவடி எண்களின் வரிசைப்படி 14 மேஜைக்கு 14 கட்டுப்பாட்டு கருவிகள் வீதம் ஒவ்வொரு சுற்றுக்கும் வழங்கப்படும். அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட பின்னரே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் வீதம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு உறுதிசெய்யும் இயந்திரத்தில் (VVPAT) சேகரமாகியுள்ள காகித சீட்டுகளை வேட்பாளர்கள் வாரியாக எண்ணி அவற்றினை கட்டுப்பாட்டு கருவியில் பதிவாகியுள்ள வேட்பாளர்கள் வாரியாக வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கை விபரங்கள் உரிய படிவத்தில் தயார் செய்யப்பட்டு அதன் பிரதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அருகில் உள்ள வேட்பாளர் அல்லது முதன்மை முகவருக்கு வழங்கப்படும். தகவல் பலகையிலும் அதன் விபரம் வெளியிடப்படும். ENCORE செயலியிலும் பதிவு செய்யப்படும். அதன் பின்னரே அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கான அறிவிப்பு அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த பின்னர் படிவம் 20-ல் சட்டமன்றத் தொகுதி வாரியாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனுடன் அஞ்சல் வாக்குகள் விபரம் சேர்த்து ஒட்டுமொத்த நாடாளுமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர் வாரியாக வாக்குகள் விவரம் ஒலி பெருக்கு மூலமாகவும், தகவல் பலகையிலும் வெளியிடப்படும். தேர்தல் வெற்றி பெற்றமைக்கான சான்றினை பெறுவதற்கு வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சக்திவேல், முருகேஸ்வரி, சரவணன், பால்பாண்டி, மாரி, கங்காதேவி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் தள்ளுபடிக்கு காரணமென்ன?

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் குறித்து கலெக்டர் கூறியதாவது: ராணுவ சேவையில் உள்ள வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரப்பெறப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகள் ஒரு மேஜையில் QR கருவி மூலம் ஸ்கேன் செய்த பின்னர் எண்ணப்படும். அஞ்சல் வாக்குச்சீட்டில் உறுதி மொழியில் வாக்காளர் கையொப்பம் இல்லாமல் இருத்தல், வாக்காளர் கையொப்பம் உரிய அலுவலரால் சான்றொப்பம் செய்யப்படாமல் இருத்தல், உறுதிமொழிப் படிவம் 13(ஏ) மற்றும் 13(பி) கவர் உறையில் வாக்குச்சீட்டு வரிசை எண் மாறுபாடாக இருத்தல் போன்றவை கண்டறியப்பட்டால் அந்த அஞ்சல் வாக்குச்சீட்டு தள்ளுபடி செய்யப்படும்.

மேலும், எவருக்கும் வாக்களிக்காத வாக்குச்சீட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களக்கு வாக்களிக்கப்பட்டிருத்தல், போலி வாக்குச்சீட்டு என கண்டறிந்தால், சிதலமடைந்த அல்லது சேதமடைந்த வாக்குச்சீட்டு, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உறை மூலமாக அனுப்பி வைக்கப்படாத வாக்குச்சீட்டு, வேட்பாளர் எவர் என அறிந்துகொள்ள இயலாத வகையில் குறியீடு செய்யப்பட்டிருத்தல், வாக்காளரை குறிக்கும் வகையில் குறியீடு அல்லது எழுத்து மூலமாக எழுதப்பட்டிருத்தல் போன்ற காரணங்களால் அஞ்சல் வாக்குச்சீட்டு தள்ளுபடி செய்யப்படும். அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் படிவம் 20-ல் அறிக்கை தயார் செய்து அனைத்து முகவர்களுக்கும் நகல் வழங்கப்படும்.

The post வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதியில்லை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Collector ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல்;...