×
Saravana Stores

சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம்

* சீரமைப்பு பணிகள் மும்முரம்

* மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் : மக்களின் மனம் கவர்ந்த தஞ்சாவூர் மணி மண்டபம் புத்தம் புதிதாக புதுப்பொலிவு பெற்று வருகிறது.தஞ்சாவூர் மக்களுக்கு மாலை நேரத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மனதை லேசாக்கிக் கொள்ள, விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசிக் கொள்ள தஞ்சாவூரில் சிவகங்கை பூங்காவை தவிர வேறு பொழுது போக்கு பூங்கா எதுவும் கிடையாது. அப்போதுதான் தஞ்சாவூரில் 1995ம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டின் போது பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதில் ஒரு திட்டம்தான் தஞ்சாவூர் ராமநாதன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டது தான் கம்பீரமான மணிமண்டபம்.

தஞ்சாவூரில் ஆட்சி செய்த சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. 3.23 ஏக்கரில் ரூ.1.60 கோடி மதிப்பில் இந்த மணி மண்டபம் மிக கம்பீரமாக கட்டப்பட்டது. தற்போது பொழுது போக்க அருமையான இடம் வந்திடுச்சு என்று தஞ்சாவூர் மக்கள் குதூகலம் அடையும் வகையில் இந்த ராஜராஜன் மணி மண்டபம் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. நடுத்தர குடும்பங்களின் பொழுது போக்கு இடத்தில் முதன்மையாக இந்த மணிமண்டபம் இடம் பிடிக்கிறது.

இந்த மணிமண்டபத்தில் பூங்கா மற்றும் கோபுரம், ராஜராஜன் அகழ்வைப்பகம் என்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. மாலை நேரத்தில் மணிமண்டபம் செம ஹார்ட் ஸ்பாட் ஆக மக்களுக்கு இருந்தது என்றால் மிகையில்லை. நன்கு வளர்ந்த மரங்கள் மண்டபத்தை குளுமையாக்கி விடும். மாலை நேரத்தில் மரங்களின் ஊடே புகுந்து வரும் காற்று மனதை தாலாட்டும்.மணிமண்டபத்தில் புல்தரைகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடமாக உள்ளது.

ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டினம் என குழந்தைகள் மகிழ்ச்சியுறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து ஆற அமர மனதை ரிலாக்ஸ் படுத்திக் கொள்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் மாலை வேளைகளில் மணிமண்டபம் நிறைந்து காணப்படும் மணிமண்டபத்தில் நடுவில் உள்ள மண்டபத்தில் மாடித் தளங்களில் ஏறி பார்த்தால் தஞ்சாவூரின் “வியூ” மனதை கொள்ளைக் கொள்ளும். மழை பெய்யும் நேரங்களில் ஆஹா என்ன அற்புதம் என்று குதூகலிக்கலாம். அந்தளவிற்கு தஞ்சாவூர் மக்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளது மணிமண்டபம்.

இந்நிலையில் இந்த மணிமண்டபத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. மண்டபம் புதுப்பொலிவுடன் பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நடைபாதைகள் சீரமைப்பு, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரம், கயிறு பிடித்து ஏறி சறுக்கும் விளையாட்டு என்று அனைத்தும் புதுப்பொலிவு பெற்று வருகிறது. புல்தரைகள் அமைக்கும் பணிகளும் கிடுகிடுவென்று நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்தால் அட்டகாசமாக மணிமண்டபம் ஜொலிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

* மணிமண்டபத்தில் நடுவில் உள்ள மண்டபத்தில் மாடித் தளங்களில் ஏறி பார்த்தால் தஞ்சாவூரின் “வியூ” மனதை கொள்ளைக் கொள்ளும். மழை பெய்யும் நேரங்களில் ஆஹா என்ன அற்புதம் என்று குதூகலிக்கலாம். அந்தளவிற்கு தஞ்சாவூர் மக்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளது மணிமண்டபம்.

The post சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur bell hall ,Chota ,Thanjavur ,bell hall ,Mansion Hall ,Chōcha ,Kings ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் இலக்கை தாண்டி...