×

திறந்தநிலையிலான ‘ஊக்கை’ விழுங்கிய 3வயது குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை

*நெல்லை காவேரி மருத்துவமனை டாக்டர் குழுவினர் சாதனை

நெல்லை : திறந்தநிலையில் இருந்த ஊக்கை விழுங்கிய 3வயது குழந்தைக்கு நெல்லை காவேரி மருத்துவமனை டாக்டர் குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து ஊக்கை அகற்றினர்.
கோவில்பட்டியை சேர்ந்த 3 வயது குழந்தை, திறந்த நிலையிலிருந்த ஊக்கு (சேப்டி பின்) விழுங்கிய நிலையில், திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்து எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்ததில், விழுங்கிய ஊக்கு வயிற்றினுள் திறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. கூர்மையான பொருள் என்பதாலும், குடலில் துளைத்து செல்ல வாய்ப்புண்டு என்பதாலும் அதை உடனடியாக அகற்ற வேண்டியிருந்தது.

ஆனால் குழந்தை ஊக்கு விழுங்கிய பிறகு உணவு சாப்பிட்டிருந்தது. அதனால் அதனை அகற்றும் செயல்முறையை உடனடியாக செய்ய முடியாமல், அதற்காக 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. 5 மணி நேரத்திற்கு பின்னர் குழந்தைக்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. மயக்கமருந்து நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு பாதுகாப்பாக எண்டோஸ்கோபி செய்து, குடல், உணவுக்குழாய், வயிற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், திறந்த நிலையிலிருந்த ஊக்கை எளிதாக அகற்றியது. எண்டோஸ்கோபிக்கு பிறகு, குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியதுடன், மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

இது குறித்து டாக்டர். சபீக் கூறுகையில், ‘சிறு குழந்தைகள் ஏதாவது ஒன்றை தவறுதலாக விழுங்கும்போது அது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கிறது. அப்படிப்பட்ட சூழல்களில் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று, உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது. இந்த அவசர சூழ்நிலையில் எனக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை காப்பாற்ற உதவிய மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினரை பாராட்டுறேன்’ என்றார்.

அர்ப்பணிப்புடன் விரைந்து செயல்பட்டு நல்ல முறையில் சிகிச்சை வழங்கி குழந்தையை வெற்றிகரமாக மீட்ட டாக்டர் சபீக் மற்றும் அவரது குழுவினரைப்பாராட்டிய மருத்துவ நிர்வாகி டாக்டர் கே.லட்சுமணன், ‘இந்த சம்பவம் பொது மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், காவேரி மருத்துவமனையானது துரிதமான சேவையை சிறப்பாக வழங்குவதற்கு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது’ என்றார்.

The post திறந்தநிலையிலான ‘ஊக்கை’ விழுங்கிய 3வயது குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Nellai Kaveri Hospital Dr. Team ,Nellai ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...