×

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு

*குடிசை வீடு கணக்கெடுப்பு பணி தீவிரம்

*31ம் தேதிக்குள் பதிவேற்ற அரசு உத்தரவு

வலங்கைமான் : வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு செய்ய கணக்கெடுப்பு பணி தீவிரமடைந்துள்ளது. தேர்வுக்கு பின் 31ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006, 2011 ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றில் முத்தான மூன்று திட்டங்களாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவையாகும். இவற்றில் மிக முக்கியமானதாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அனைத்துக் கட்சியினர் ஆளும் வரவேற்கப்பட்ட ஒன்றாகும்.

தமிழகத்தில் 2010ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டபோது 22 லட்சத்து 4 ஆயிரம் குடிசை வீடு கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 3.05 லட்சம் பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு புத்துணர்வு அளித்து செயல்படுத்தி வருகிறது.முதல்கட்டமாக குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இன்னும் எவ்வளவு குடிசை வீடுகள் உள்ளன என்பதை கண்டறிய அனைத்து ஊராட்சிகளிலும் குடிசை வீடுகள் எண்ணிக்கை குறித்து மறு கணக்கெடுப்பு நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், சுகாதார ஊக்குவிப்பாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசை வீட்டின் கணக்கெடுப்பின்படி உள்ள பயனாளிகள் ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்து உள்ளார்களா என்பதை கண்டறிந்தும் மேலும் புதிதாக குடிசை வீடுகள் கட்டப்பட்டுள்ளனவா என்பன குறித்தும் இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் அனைத்து கூரை வீடுகளும் சுழற்சி முறையில் கான்கிரீட் வீடுகளாக மாற்ற திமுக அரசு அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு, அதில் வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும். 300 சதுர அடி RCC கூரையுடன், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும். ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும். குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியான பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

The post வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Union ,Valangaiman union ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் தொழுவூர் அரசு...