×

கண்குறை நீக்கும் கண்ணிறைந்த பெருமாள்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப் பட்டி கண்ணிறைந்த பெருமாள் வைணவத் திருக்கோயில். சுக்கிரகிரஹ பரிகார ஸ்தலம். திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின்மீது தனித் தனியே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில், இவ்வூர் திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது. இங்கு, அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு பெருமான் கோயில்,திருப்பதிக்குச் சமமாகப் பார்க்கப் படுகிறது. இங்குள்ள சிவன் கோயிலோ, திருமால் கோயிலைவிட சற்று காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது. மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறுசில பழங்கால குகைக் கோயில்களும் உள்ளன.

இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை உள்ளன. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி.775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில், இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது.

மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம், பிரமிப்பூட்டுகிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில், சப்தமாதர்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள். மலையையே குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின்மீது அமர்ந்து அரக்கனை அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

குகையையொட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பாணி உடையது. பல்லவர் கால கலைப் பாணியை ஒட்டி வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. மற்ற கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் குகையின் மேற்குப்பகுதியில், விஷ்ணு குகை காணப்படுகிறது. இந்தக் குகைக் கோயிலில், பள்ளிகொண்ட பெருமாள், குகையில் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளார். சாய்ந்த கோலத்தில் இருக்கும் இறைவன் பள்ளி கொண்ட பெருமாள் என்றும், கண்ணிறைந்த பெருமாள் என்றும், இறைவி கமலவல்லித்தாயார் என்றும் அழைக்கப்படுகிறது.

அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். திவாகர மகரிஷி இத்தலத்தில் தவம் செய்ததால், மகாவிஷ்ணு தனது ஆசிர்வாதத்தை அவருக்கு வழங்கினார் என்று புராணம் கூறுகிறது. கலியுகத்தில் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்ய இறைவன் அர்ச்சரூபமாக இந்த தலத்தில் வலம் வர வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இதனை ஏற்ற விஷ்ணு, அர்ச்சரூபத்தில் இருக்கிறார். அதாவது, பக்தர்களுக்கு காட்சியளிக்க சிலையாக உருவெடுத்தார் என்றும் கூறப்படுகிறது. விஷ்ணு குகைக் கோயில், கருவறையையும், முன்னாள் ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள், சிவன் கோயிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காண்கிறோம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலைப் பாணியைக் கொண்டது என்கின்றனர். மண்டபத்தின் சுவரில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையாக சித்தரிக்கப்படுகிறார். எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்றா, இருந்தா, கிடந்தா (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) தோரணங்களைக் கொண்ட மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மத்திய அனந்தசயன குழுவில் 5 முகங்கள் கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், ஆயுத புருஷன், வான மனிதர்கள் போன்றவர்கள் உள்ளனர். துவாரபாலர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள், தாயாரின் சந்நதி காலத்தால், மிகவும் பிற்பட்டதாகும். கி.பி.16-ஆம் நூற்றாண்டில், இப்பகுதி தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்குக் கொடையளித்த செய்தியும் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

சிறப்பம்சாக இந்த குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். இவற்றில், ஆந்திரா மாநிலம் லிபாக்ஷியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும் என்கின்றனர். முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்குகிறது என்கின்றனர்.

கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. குடைவரைக்கோயில், பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மிக முக்கிய திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் அருகே இருக்கும் இந்த பிரமாண்ட பாறைகளின் மேல், சமணர் படுகைகள் வரிசை, வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

அவற்றைச் சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன. கண்ணிறைந்த பெருமாள் கோயில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை. கோயிலுக்கு எதிரில் சக்திவாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள்படாமல் நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோயிலுக்குள் செல்ல வேண்டும். இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு அருகில் உள்ள சக்தி தீர்த்தத்திலிருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம்கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால், லட்சுமி கடாட்சம் பெருகும்.

திருமணத் தடை நீங்கும் என்பதும் இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக் கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப் பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால், அல்லல் நீங்கி குபேரசம்பத்துக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளி கார்த்திகை, ஆடி, தை வெள்ளிக் கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச் சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

தினமும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். தினமும் நான்கு முறை காலசந்தி காலை 7.00, உச்சிக்காலம் மதியம் 12.00, சாயரட்சை மாலை 6.00 மற்றும் அர்த்தஜாமம் இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் பூஜைகள் நடைபெறுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக் கோட்டை செல்லும் வழித்தடத்தில், 16கிமீ தூரம் பயணம் செய்தும், மலையடிப்பட்டி குகைக் கோயிலை அடையலாம்.

The post கண்குறை நீக்கும் கண்ணிறைந்த பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Perumal Vaishnavism temple ,Patti Kannirainta ,Pudukottai district ,Kulathur circle ,Sukragraha Parikhara Sthala ,Thirumayam Kudaivar temple ,Shiva ,Vishnu ,
× RELATED பெருமாள் கோயிலில் நகை திருட்டு