×

மாவட்டத்தில் நடப்பாண்டு 8,500 மண் மாதிரி பரிசோதனை செய்ய இலக்கு

*அதிகாரிகள் தகவல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 8,500 மண் பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் அனைத்து கிராம திட்டத்தின் கீழ் 4800 மண் பரிசோதனையும், ஒருபயிர் -ஒருகிராமம் திட்டத்தின் கீழ் 3700 மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.தர்மபுரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 90 சதவீத மண் மலட்டுத்தன்மையாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மண்ணை பரிசோதனை செய்து சாகுபடி செய்தால் உரிய விளைச்சல், மகசூல் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மண் பரிசோதனை செய்வதற்காக இம்மாவட்டத்திற்கான மண் பரிசோதனை மையம் தர்மபுரியின் மையப்பகுதியில் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. 1972ம் ஆண்டு தர்மபுரியில் மண் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இந்த மண் பரிசோதனை மையத்தில் உள்ள ஆய்வகத்தில் 14 வகையான மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நவீன உபகரணங்களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுபோல் பாசன தண்ணீரும் இங்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 14,132 மண் பரிசோதனையும், 8 ஆயிரம் பாசன தண்ணீர் வகை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்தால் மட்டுமே பழைய விவசாய மண்ணை மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் மண் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்டு மேலும் மலட்டுத்தன்மையடையும். மண் பரிசோதனை செய்திடுவோம், பயிர் விளைச்சல் பெருக்கிடுவோம் என்ற தலைப்பில் இப்போது மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் இளங்கோ, மூத்த வேளாண் அலுவலர் செல்வம் ஆகியோர் கூறியதாவது: விவசாயம் மற்றும் எந்தவொரு கட்டுமானத்திற்கும் முன் மண் பரிசோதனை செய்வது மிக முக்கியமான செயல்முறையாகும். மண் பரிசோதனை என்பது மண்ணின் தரம் மற்றும் தாங்கும் திறனை ஆய்வு செய்வதாகும். மண்ணின் பண்புகள், தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றைக் கண்டறிய ஒரு புவி தொழில்நுட்ப நிபுணர் மண் மாதிரிகளைச் சரிபார்ப்பது மண் பரிசோதனையாகும்.

மண் பரிசோதனை செய்யப்பட்ட உரங்களை வெவ்வேறு பயிர்களுக்கு உபயோகிக்கலாம். விவசாய நிலத்தின் மண் பரிசோதனை செய்வதால், மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் நிலவரம் விவசாயிக்கு தெரியவருகிறது. இந்த நிலவரத்தினை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயிரிடுதல் நடக்கிறது. மண் பரிசோதனை மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு உரமிடுதல், பயிரிடுதல், நீர்ப்பாசனம் ஆகியவை செய்யப்படுகிறது.

ரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்க வேண்டும். சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும். பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும். எனவே மண் பரிசோதனை செய்து மண்வளம் அறிய வேண்டியது அவசியமாகும். மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துகொள்வது அவசியமாகும். மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம். பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைத்திட வேண்டும்.

தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம். ஒரு மண் மாதிரியின் ஆய்வு கட்டணம் ₹30 ஆகும். மனிதனுக்கு மருத்துவ சோதனை எவ்வளவு முக்கியமோ, அதுபோல நிலத்திற்கும் மண் பரிசோதனை செய்வது அவசியம். நடப்பாண்டு 8500 மண் பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் அனைத்து கிராம திட்டத்தின் கீழ் 4800 மண் பரிசோதனையும், ஒருபயிர் ஒரு கிராமம் திட்டத்தின் கீழ் 3700 மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மண் மாதிரி சேகரிக்கும் முறை

மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கும் குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.

அதிகபட்சமாக 5 ஹெக்டருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் ஹெக்டருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை. பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது. மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் நடப்பாண்டு 8,500 மண் மாதிரி பரிசோதனை செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Kalayan ,Dinakaran ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு