×

மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை

*மலர்களால் அலங்கார பணி தீவிரம்

ஊட்டி : மலர் கண்காட்சி முடிந்ததால் இன்று முதல் கண்ணாடி மாளிகை திறக்கப்படும் நிலையில், அதனை மலர்களால் அலங்காரம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருவது வழக்கம்.

கோடை காலத்தின் போது, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த மலர் கண்காட்சியின் போது, பூங்கா முழுவதிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், பல வண்ண மலர்கள் பூத்துக் காணப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்களும், மேலும் பல லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இதனை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினமும் வரும் நிலையில், ஊட்டியில் உள்ள கண்ணாடி மாளிகை பாதுகாப்பு கருதி மூடப்படுவது வழக்கம்.

அதிக மக்கள் கூட்டம் வரும் போது, கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டிருந்தால், அவர்கள் போட்டோ எடுக்கும் மோகத்தில் மலர் தொட்டிகளை தட்டி விட்டு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பள்ளது. எனவே, ஆண்டுதோறும் மலர் கண்காட்சியின் போது இந்த கண்ணாடி மாளிகை மூடப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டும் கடந்த 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்கிய நிலையில், கண்ணாடி மாளிகை மூடப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்தது. இந்நிலையில், தற்போது மலர் கண்காட்சி முடிந்த நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.மேலும், கண்ணாடி மாளிகையை திறக்க கோரி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் பூங்கா நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பார்வையிட கண்ணாடி மாளிகை திறக்க பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நேற்று ஊழியர்கள் இந்த கண்ணாடி மாளிகையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பூங்கா நர்சரியில் இருந்து பல ஆயிரம் பல வண்ண மலர் செடிகளை கொண்ட தொட்டிகளை கொண்டு வந்து இங்கு மலர் கோபுரங்களை அமைத்தனர்.

மேலும், பல வண்ணங்களை கொண்ட லில்லியம் மலர்களால் கண்ணாடி மாளிகையின் இரு புறங்களிலும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அலங்கார பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக இன்று திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Glass ,House ,glass house ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு