×

வாழ்வில் இருள் நீங்கி ஒளிமலர இந்த நாமம்

சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா

நாம் அம்பிகையின் பாத வர்ணனைகளை பார்த்துக் கொண்டே வருகிறோம். இதற்கு முந்தையை நாமமான பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா… என்கிற நாமத்தில் அம்பிகையின் பிந்து என்றழைக்கப்படும் ஒளியினுடைய சொரூபத்தை பார்த்தோம். ஒளியே அம்பிகையின் ஒரு பாதமாக மலர்ந்திருக்கிறது என்று பார்த்தோம். ஏனெனில், ஒலி, ஒளியே பிரபஞ்சமாக அண்ட சராசரங்களாக விரிந்துள்ளது. இப்போது இந்த நாமமான சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா.. என்பது நாத தத்துவமான ஒலியைக் குறிக்கின்றது. இந்த நாமத்தில் அம்பிகையானவள் தன்னுடைய பாதத்தில் அணிந்திருக்கக் கூடிய ஒரு ஆபரணம். அதை நாம் சிலம்பு, கொலுசு, பாத கடகம் என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லலாம். நாம் சுலபமாக புரிந்துகொள்ளவேண்டுமென்றால், கொலுசு என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆபரணங்கள் அனைத்தும் ரத்தினங்களால் நிறைந்திருக்கிறது. அம்பிகை நடக்கும்போது அந்த ரத்தினங்களிலிருக்கும் அந்த ரத்ன நூபுரங்கள் ஒலியை எழுப்புகின்றன. அப்படி எழுப்புவதைத்தான் வசின்யாதி வாக் தேவதைகள் சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டிதம் என்று சொல்கின்றனர். இந்த ரத்தின மணிகள் எழுப்பக் கூடிய ஒலிகளால்… சப்தங்களால்… நிறைந்து இருக்கக் கூடியது. எது நிறைந்திருக்கிறது எனில், சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா… ஸ்ரீ பதாம்புஜம் அம்பிகையினுடைய உயர்ந்த திருவடித் தாமரைகள்… ஸ்ரீபத அம்புஜம்.. அம்புஜம் என்றால் தாமரைகள் என்று அர்த்தம். அம்பிகையினுடைய உயர்ந்த திருவடித் தாமரைகள் எப்படி இருக்கிறதெனில், ரத்தினங்களால் எழுப்பப் படக்கூடிய ஒலிகளால் நிறைந்திருக்கிறது. இதற்கு முந்தையை நாமம் பாதம் முழுவதும் ஒளியாக நிறைந்திருக்கிறது என்று பார்த்தோம். இந்த நாமம் என்னவாக இருக்கிறதெனில் ஒலியாக நிறைந்திருக்கிறது என்று பார்க்கிறோம்.

இதற்கு முந்தைய நாமத்தில் பிந்துவையும், இதில் நாதத்தையும் சேர்த்து அம்பிகையினுடைய திருவடிகள் இரண்டும் நாதம் மற்றும் பிந்து சொரூபமாக உள்ளன. இப்போது இந்த நாத பிந்து சொரூபங்களின் தொகுப்புதான் மொத்த பிரபஞ்சத்தினுடைய சிருஷ்டியுமே ஆகும். அப்போது இந்த மொத்த சிருஷ்டிக்கும் மூலம் எதுவெனில் (origin point), அம்பிகையினுடைய திருவடி. இந்த உலகத்தில் நாம் பார்க்கக்கூடிய எல்லாமே ஒன்று சொல்லாக இருக்கும். அல்லது பொருளாக இருக்கும். ஒரு வார்த்தையாக இருக்கும். அல்லது பொருளாக இருக்கும். பதம் மற்றும் அர்த்தமாக இருக்கும். பதம் என்பது சொல். அந்த பதத்திற்கு அர்த்தமாக இருக்கும். இந்த சொல்லும் பொருளுமாகத்தான் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறது. அதனால்தான் கவி காளிதாசன் தன்னுடைய ரகுவம்ச காவிய ஆரம்ப ஸ்லோகத்தில் என்ன செய்திருக்கிறார் எனில்,

வாகர்த்தா விவ சம்பிரௌத்தௌ
வாகர்த்த பிரதி பத்தயே
ஜகதப் பிதரோ வந்த்யே
பார்வதி பரமேஸ்வரௌ

எல்லாமுமே சொல்லும் பொருளுமாகத்தான் இந்த உலகம் முழுவதுமாக இருக்கிறது. சொல்லும் பொருளுமே சிவசக்தி சொரூபம்தான். இந்த நாத பிந்து என்று சொல்வதே சிவசக்தி சொரூபம்தான். இந்த சிருஷ்டி முழுக்க அப்படித்தான் இருக்கிறது. இப்போது அம்பிகையினுடைய பாதத்தை ஏன் நாம் நாத பிந்து சொரூபமாகப் பார்க்கிறோமெனில், சிவசக்தி ஐக்கிய சொரூபிணீ லலிதாம்பிகா… என்று சொல்கிறது. அம்பிகை என்று சொல்கிற ரூபம் என்னவெனில் அந்த சிவசக்தி ஐக்கிய சொரூபம்தான். அந்த ஐக்கிய சொரூபத்தில் நாம் ஏன் இந்த பாதங்களை நாத பிந்துவா பார்க்க வேண்டுமனில், வலது பாதம் சிவத்தையும், இடது பாதம் சக்தியையும் குறிக்கிறது. அதனால்தான் நாம் இந்த பாதத்தை நாத பிந்துவாக பார்க்கிறோம்.

ஒலி என்கிற sound மயமாக இருப்பது அம்பிகையினுடைய திருவடித் தாமரை. இதற்கு முந்தையை நாமாவில் இருக்கக் கூடிய அம்பிகையினுடைய ஒளி வடிவமானது என்று பார்த்தோம். இந்த நாமாவில் ஒலி வடிவமாக இருக்கக் கூடிய அம்பிகையினுடைய திருவடித் தாமரை என்று பார்க்கிறோம். இப்போது இந்த இரண்டு நாமாக்களிலுமே தாமரை வருகின்றது. இதற்கு முந்தைய நாமாவில் பராருஹ ஸரோருஹா… என்று வந்தது. இந்த நாமாவில் பத அம்புஜம் என்று வருகின்றது. அம்புஜமென்றால் தாமரை. அப்போது இந்த முந்தைய நாமாவை ஆங்கிலத்தில் the lotus of light – ஒளி மயமான தாமரை என்று சொல்லலாம். இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நாமாவை the lotus of sound ஒலி மயமான தாமரை என்று இந்த நாமத்தைச் சொல்லலாம்.

இந்த நாத பிந்து என்று இந்த இரண்டு நாமங்களிலும் நாம் எதைச் சொல்கிறோமோ… அதைத்தான் நாம் இந்த பிரபஞ்சத்தில் நாம ரூபமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் நாமம் என்று எதையெல்லாம் சொல்கிறோமோ அதெல்லாம் sound. ரூபம் என்று எதையெல்லாம் சொல்கிறோமோ அதெல்லாம் light. ஒரு பெயரைச் சொல்லும்போது அந்த பெயருக்குரிய உருவம் வரும்போது, அந்த உருவத்தை நாம் பார்க்கும்போது அந்த பெயருக்கான அர்த்தம் நமக்கு விளங்குகிறது.

இப்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற ஒருவரை பார்க்காத ஒருவரிடம் போய் ஜே.கே. என்று சொன்னால், அவரைப் பொறுத்தவரை அது ஒரு ஒலி அவ்வளவே. அந்த உருவம் நமக்கு தெரிந்தால்தான். இவர்தான் ஜே.கே. அப்படிங்கறது தெரியும். இப்படித்தான் இந்த உலகத்தில் எல்லாமே இருக்கிறது. இந்த உலகில் எதை எடுத்துக் கொண்டாலும், அதற்கொரு பெயரும், உருவமும் சர்வ சாதாரணமாக வந்து விடுகின்றது. இப்படி நாம ரூபம் பிரபஞ்சமாக விரிந்திருப்பதே இந்த பிரபஞ்சம். இந்த நாம ரூபமான combinationக்கு எல்லாம் எது மூலமாக இருக்கிறதெனில், நாத பிந்துதான் மூலமாக இருக்கிறது. இந்த lightம் soundம் தான் மூலமாக இருக்கிறது. இந்த நாத பிந்துக்கு எது மூலமாக இருக்கிறதெனில், அம்பிகையினுடைய திருவடிகள் மூலமாக இருக்கிறது. இந்த ஒளியும் ஒலியுமே பிரபஞ்சமாக சிருஷ்டியாகி இருக்கிறது. அந்த பிரபஞ்ச சிருஷ்டிக்குள் நாம் இதை நாம ரூபங்களாக பார்க்கிறோம். அப்பேர்ப்பட்ட இந்த நாம ரூப பிரபஞ்சம் எங்கிருந்து உற்பத்தி ஆகி இருக்கிறதெனில், அம்பிகையினுடைய திருவடியிலிருந்து உற்பத்தி ஆகியிருக்கிறது.

இப்போது, நாம் பார்க்கின்ற நாம ரூபம் என்கிற பிரபஞ்சத்திலிருந்து, divided ஆக இருக்கக் கூடிய பிரபஞ்சத்திலிருந்து நாம் அத்வைதம் என்கிற unityக்கு போக வேண்டுமென்றால், அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி எங்கு இருக்கிறது என்றால். எந்தத் திருவடியிலிருந்து இந்தப் பிரபஞ்சம் உற்பத்தி ஆயிற்றோ அந்தத் திருவடியை பிடித்துக் கொண்டோமென்றால் நாம் நம்முடைய சொரூபத்தை அடையலாம். அதாவது ஆத்ம சொரூபத்தை, அம்பிகையை என்று எப்படி சொன்னாலும் அதை நாம் அடையலாம்.

இதைத்தான் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகள் உதித்த இடத்தில் ஒடுங்குதல் என்கிறார். இன்னும் சொல்லப்போனால் உதித்த இடத்தில்தான் ஒடுங்கமுடியும். உதிப்பது ஒரு இடமாகவும் ஒடுங்குவது ஒரு இடமாகவும் இருக்கமுடியாது. அப்போது இது அனைத்தும் உதித்தது எங்கே… திருவடியிலிருந்து. அப்போது ஒடுங்குவதும் திருவடியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி ஒடுங்கக் கூடிய திருவடியை தியானம் செய்யச் செய்ய இந்த பிரபஞ்சத்திற்குள் நாம் ஒடுங்க மாட்டோம். இந்தப் பிரபஞ்சத்தை நாம் பார்க்கிறோமல்லவா… நாம் பார்க்கக் கூடிய இந்த பிரபஞ்சம் ஒடுங்கி விடும். நாம் நம்முடைய சொரூபத்தில் ஒடுங்கிவிட்டோம் எனில், நம்மைப் பொறுத்தளவில் இந்தப் பிரபஞ்சம் ஒடுங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

மொத்தப் பிரபஞ்சமும் ஒடுங்குவது பிரளய காலத்தில்தான். அதுபற்றி நாம் கவலைப்பட வேண்டாம். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றையெல்லாம் அம்பிகை பார்த்துக் கொள்வாள். இந்தப் பிரளயத்தைப்பற்றியெல்லாம் நமக்கு கவலை கிடையாது. நமக்கு எப்போது ஒடுங்குகிறது என்றால் திருவடியை தியானிக்கும்போது சொரூபத்திற்கு போகும்போது இந்த நாம ரூப பிரபஞ்சம் முழுக்க ஒடுங்கிப் போய்விடுகின்றது. அப்போது இந்த நாம ரூபப் பிரபஞ்சம் முழுக்க என்னவெனில், அம்பிகையின் திருவடியைத் தவிர வேறொன்றுமில்லை என்று தெரிந்து போய்விடும்.

அது சரி, அதையே இங்கு வந்து, இந்த நாமாவில் அப்படி திருவடியை நாம் தியானித்து இந்த பிரபஞ்சமெல்லாம் ஒடுங்கும் அந்த உணர்வை நமக்கு கொடுப்பதற்கு, அந்த திருவடியை தியானம் பண்ணுவதற்கு என்ன சாதனை. அதற்கு ஏதாவது ஒரு வழிமுறை இருக்க வேண்டுமல்லவா… அந்த வழிமுறை என்னவென்று இந்த நாமாவிலேயே வசின்யாதி வாக்தேவதைகள் அந்த வழிமுறையை காண்பித்துக் கொடுக்கிறார்கள். எப்படி காண்பித்து கொடுக்கிறார்கள் எனில், சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டிதம்… என்று சொல்கிறார்கள் அல்லவா… அந்த பாதத்திலிருந்து ஒலி வருகிறது என்று சொல்கிறார்கள் அல்லவா… அது என்ன ஒலி என்றால், அந்த ஒலி சாதாரண ஒலி இல்லை. இந்தப் பிரபஞ்சத்திற்கே மூலமாக இருக்கக் கூடிய பிரணவநாதம் என்கிற ஒலியாகும்.

இந்த பிரணவ நாதத்திலிருந்தே அதாவது ஓம் என்கிற பிரணவநாதம். அதிலிருந்தே வேதங்களும் அதன் வழியே சிருஷ்டியுமென்று ஒரு கிரமத்தை வேதங்கள் கோஷிக்கின்றன. அந்த வேதங்கள் மந்திர மயமாக இருக்கிறது. அந்த மந்திரமயமான வேதத்தை யார் வைத்திருக்கிறாரோ அந்த பிரம்மாதான் இந்த பிரபஞ்சத்தையே சிருஷ்டிக்கிறார். அப்போது திருவடியிலிருந்து பிரணவநாதம், பிரணவ நாதத்திலிருந்து வேதம். அந்த வேதத்திற்குரிய பிரம்மா. அந்த பிரம்மாவினால் இந்த சிருஷ்டி. இந்த சிருஷ்டி எப்படி இருக்கிறது எனில் நாம ரூபமாக இருக்கிறது. அந்த நாம ரூபமான சிருஷ்டி கடைசியில் எங்குபோய் ஒடுங்குகிறதெனில், எங்கிருந்து இந்த பிரணவநாதம் உற்பத்தி ஆயிற்றோ அந்த திருவடியிலேயே சென்று ஒடுங்குகிறது.

ஓங்காரப் பொருளோ ஒப்புயர் இல்லோய் உனையார் அறிவார் அருணாசலா. ரமண பகவான் அந்த நான் எனும் பிரம்மமே நான் எனும் அந்த சத்தியமாக இருக்கிறது. அதன் தம்பிதான் ஓம் என்பார். அதாவது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல நான் எனும் அகண்ட வஸ்துவும், ஓம் என்பதும் இருக்கிறது. நாம் வெளியிலே பிரபஞ்சத்தை நோக்கினால் அது ஓம். உள்ளே நோக்கினால் நான் என்கிற அஹம். அவ்வளவுதான்.

இப்போது மீண்டும் இந்த நாமாவிற்கு வருவோம். சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா… இந்த ஸ்ரீபதாம்புஜா… என்று சொல்லும்போது வசின்யாதி வாக்தேவதைகள் அந்த பதாம்புஜம் அம்பிகையினுடைய பாதத் தாமரை என்று சொல்லும்போது அதற்கு முன்னால் ஒரு சப்தத்தை சேர்க்கிறார்கள். அதாவது ஒரு எழுத்தை சேர்க்கிறார்கள். ஸ்ரீ என்கிற பதத்தை சேர்க்கிறார்கள். இப்போது ஸ்ரீ பதாம்புஜம் என்று சொல்வதற்கு என்ன காரணம். அம்பிகையினுடைய திருவடி என்பது மிக உயர்ந்த பொருள். அதனால் நாம் அதை ஸ்ரீ என்று சொல்கிறோம்.

ஸ்ரீ பதாம்புஜா என்று சொல்லும்போது அம்பிகையினுடைய பாதம் உயர்ந்த பொருள் என்கிறபோது ஸ்ரீ சேர்த்துக் கொண்டார்கள் என்று சொல்லலாம். இப்போது உயர்ந்த பொருளை சொல்வதற்கு ஸ்ரீ சேர்ப்போம். ஆனால், இங்கு அதுதான் அர்த்தமா… அம்பிகையினுடைய பாதம் உயர்ந்தது என்று எல்லோருக்குமே தெரியுமே! பிறகு ஏன் இங்கு ஸ்ரீ சேர்க்க வேண்டுமெனில், இந்த ஸ்ரீ என்கிற சப்தத்திற்குள்தான் அம்பிகையினுடைய மந்திர சொரூபம் அடக்கமாகி இருக்கிறது. அதனால்தான் அம்பிகையினுடைய மந்திரத்திற்கு என்ன பெயர் வைத்திருக்கிறோமெனில், வித்யா என்று வைத்திருக்கிறோம். ஸ்ரீ வித்யா என்றால் ஸ்ரீ என்கிற அம்பிகையை நமக்கு எந்த மந்திரம் காண்பித்துக் கொடுக்கிறதோ அந்த வித்யாவிற்குத்தான் ஸ்ரீ வித்யா என்று பெயர்.

இப்போது வேறு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம். ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா என்பது ராம ரக்ஷா மந்திரம். பதின்மூன்று எழுத்து மந்திரம், திரயோத சாக்ஷரி மந்திரம். புத கௌசிகர் என்கிற ரிஷி இருந்தார். அந்த புத கௌசிகர் ரிஷிக்கு இந்த திரயோத சாக்ஷரி மந்திரத்தை யார் உபதேசம் செய்கிறார் என்று கேட்டீர்களானால், மிகவும் ஆச்சரியப்படுவோம். சாட்சாத் சிவ பெருமானே உபதேசம் செய்கிறார். இந்த நாமத்தைத்தான் கஞ்சன்காடு பப்பா ராமதாஸ் அவர்கள் தன்னுடைய சீடரான திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களுக்கு உபதேசம் செய்கிறார். இந்த மந்திரம் சாட்சாத் சிவபெருமானிடமிருந்து வந்த மந்திரம்.

எப்படி அம்பாளுக்கு சிவபெருமான் ராம ராம ராமேதி என்று உபதேசம் செய்கிறாரோ அதுபோல புத கௌசிகருக்கு சிவபெருமான் உபதேசம் செய்கிறார். அப்போது இந்த மந்திரத்திலுள்ள முதலில் உள்ள ஸ்ரீ என்கிற சப்தமே அம்பிகையினுடைய சொரூபம். அந்த அம்பாள் சொரூபத்தை நமக்கு காண்பித்துக் கொடுப்பதுதான் ஸ்ரீவித்யா. இப்போது வசின்யாதி வாக் தேவதைகள் நமக்கு என்ன காண்பித்து கொடுக்கிறார்கள் எனில், சிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டிதம்… என்று ஆரம்பித்தது அல்லவா பிரணவ நாதத்திலிருந்து ஆரம்பித்தது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் இந்த நாமத்தினுடைய பொருளோடு பாருங்கள்.

அந்த பிரணவ நாதத்திலிருந்து ஆரம்பித்த அந்த விஷயமானது வேதம், அதற்குரிய பிரம்மா, பிரம்மாவினால் இந்த சிருஷ்டி, இந்த சிருஷ்டிக்குள் இருக்கக் கூடிய நாம ரூபாத்மகமான பிரபஞ்சம். இவை எல்லாம் கடைசியில் எங்குபோய் ஒடுங்குகிறது எனில், அம்பாளுடைய ஏகாக்ஷர ( ஏக + அக்ஷர) சொரூபமாக இருக்ககூடிய ஸ்ரீவித்யாவில் சென்று ஒடுங்குகிறது. அதனால் ஸ்ரீ பதாம்புஜா என்று வசின்யாதி வாக்தேவதைகள் வர்ணிக்கிறார்கள். பதம் என்றால் பாதம். அம்புஜம் என்றால் தாமரை. இன்றைக்கும் ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் பூஜை செய்யும்போது, அம்பிகைக்கு முழு உருவம் இருந்தால்கூட அந்தப் பூஜையை நாம் எப்படி சொல்லி செய்வோமெனில் பாதுகாம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ… என்றுதான் வரும். திருவடிதான் பூஜைக்குரியது அங்கு. பூஜை எங்கு செய்கிறோமெனில், திருவடியில்தான் செய்கிறோம். நாம் தமிழில் கூட திரு அடி என்றுதான் சொல்கிறோம்.

ஸ்ரீ பாதம். அதனால்தான் கோயில்களில் சுவாமி எழுந்தருளும்போது அந்த சுவாமியை தாங்கிக் கொண்டு வருபவர்களை ஸ்ரீபாதம் தாங்குபவர்கள் என்றுதான் அழைக்கிறோம். இப்போது நாம் பார்க்கும் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலுள்ள ஒலியும் ஒளியும் அம்பிகையினுடைய திருவடிகள் அன்றி வேறில்லை. இந்த நாமமே ஒரு பெரிய வட்டம்போல் ஆகிவிட்டது. கலியுகத்தில் தத்தாத்ரேயருடைய முதல் அவதாரம் பாதர் வல்லபர். அவருடைய பெயரே ஸ்ரீபாதர்தான். அந்த ஸ்ரீக்குள் எல்லாமே அடக்கம். அந்த ஸ்ரீ பாதத்திற்குள் அடக்கம். பாதத்திற்குள் எல்லாமே அடக்கம்.

இந்த நாமத்திற்கான கோயிலாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் தனிக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவகாமி அம்பிகை. போன நாமத்திற்கு சிற்றம்பலத்தில் நடராஜருக்கு அருகேயுள்ள சிவகாமியை பார்த்தோம். இதற்கு தனிக்கோயிலில் அருளும் அம்பிகையை சேவிப்போம். இந்த சந்நதியில் அமர்ந்துதான் ஆதிசங்கர பகவத்பாதர் கேனோ உபநிஷத்திற்கு பாஷ்யம் செய்கிறார். கேனோ உபநிஷத்தில் என்னவொரு பெரிய விஷயமெனில் இந்த உபநிஷதத்தில்தான் அம்பிகையினுடைய சொரூபம் சொல்லப்படுகின்றது. கேனோ உபநிஷத் கடைசியில் முடிகிற இடத்தில் பிரம்மமான சிவ யக்ஷ சொரூபத்தில் வருகின்றது. யக்ஷ என்றால் யாரென்று தெரியாதவன். இவன் யாரென்று இந்திரனாலோ அக்னியினாலோ வாயுவினாலோ கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட பிரம்மம் யக்ஷ சொரூபமான சிவ சொரூபத்தில் வந்து மறைந்து போய்விடுகிறது. இப்போது வந்தது யாரென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார்கள். அப்போது அந்த இடத்தில் இன்னொரு இடத்தில் இன்னொரு ஒளி வருகிறது. அந்த ஒளி யாரென்றால் உமா ஹைமவதி.

உமா என்பது ஓம் என்பதின் சக்தி பீஜம். ஸ்ரீவித்யாவில் சக்தி பீஜம். உமா என்கிற பிரணவ சொரூபத்தில் அந்த ஹைமவதி ஆவிர்பவிக்கிறாள். வெறும் உமா என்கிற பிரணவ சொரூபமாக மட்டும் ஆவிர்பவித்திருந்தால், நாதம் என்கிற அசரீரி மட்டுமே கேட்டிருக்கும். அவள் தாயாக இருப்பதால் இந்திரன், அக்னி, வாயு போன்ற தன்னுடைய குழந்தைகளெல்லாம் வந்தது யாரென்று கஷ்டப்படுவதை பார்க்க அவர் விரும்பவில்லை. அதனால் வெறும் அசரீரியாக ஒலியாக மட்டும் வராமல் கருணையோடு சகுண ரூபம் என்கிற உருவத்தோடே ஆவிர்பவிக்கிறாள். அதாவது ஹைம்வதி என்கிற ரூபத்தோடு ஆவிர்பவிக்கிறாள்.

பொன் மயமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஹைமவதி என்கிற ரூபத்தில் ஆவிபவிக்கிறாள். ஹைமவதி என்பது அம்பிகையினுடைய பிந்து என்கிற ஒளியினுடைய சொரூபம். அதாவது light சொரூபம். உமா என்பது sound சொரூபம். ஹைமவதி என்பது light சொரூபம். நாம் இப்போது பார்த்த நாத பிந்துவாக இருக்கக் கூடியது, இந்த இரண்டு நாமங்களாக இருக்கக் கூடியவளே கேனோ உபநிஷத்தில் அப்படித்தான் ஆவிர்பவிக்கிறாள். உமா ஹைமவதியாக ஆவிர்பவிக்கிறாள். மீண்டும் மீண்டும் இந்த இரண்டு நாமங்களின் பொருளையும் கேளுங்கள். அம்பிகையின் அருளைப்பெறுங்கள்.
– (சுழலும்)

The post வாழ்வில் இருள் நீங்கி ஒளிமலர இந்த நாமம் appeared first on Dinakaran.

Tags : Sinjana ,sripadambuja ,Ambika ,Padtvaya ,Saroruha ,Ambikai ,Dinakaran ,
× RELATED பிராணசக்தியும் அம்பிகையும்